மதுரை : உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள மூவாயிரம் ஏக்கர் பாசன வசதி பெற 58 கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை மாவட்ட நன்செய், புன்செய் விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இச்சங்க கூட்டம் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. செயலாளர் பரமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நல்லாண்டி வரவேற்றார். உசிலம்பட்டி தாலுகாவில் நிலவிய தொடர் வறட்சியால் கிணறுகளில் நீர்மட்டம் ஆயிரம் அடியை தாண்டி விட்டது. விவசாயம் நடக்கவில்லை.இந்தாண்டு பருவமழை பெய்து பெரியாறு, வைகை அணைகளில் நீர்மட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும். இதற்காக இன்று ( நவ., 20) நடக்கும் கடையடைப்பில் விவசாயிகள் முழுமையாக பங்கேற்பர் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார். கலெக்டர் வினய்யிடம் மனு அளித்தனர்.