விருதுநகர் : "விருதுநகரில் அமைய உள்ள மருத்துவ கல்லுாரிக்கு ஜனவரி முதல் வாரத்தில் அடிக்கல் நாட்டப்படும்," என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். விருதுநகரில் நடந்த நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:வெற்றி தேவி நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள். மாவட்டத்தில் தி.மு.க.,வில் போட்டி போட யாருமே இல்லை. காரணம் தி.மு.க., அழிந்து கொண்டு வருகிறது. அ.தி.மு.க,வை எவராலும் அழிக்க முடியாது.
தி.மு.க.,விடம் நகராட்சியை கொடுத்தால் விற்று விடுவார்கள். எரிவதை அணைத்தால் கொதிப்பது தானாக அடங்கிவிடும். எதை அணைத்தால் ஜெயிக்க முடியும் என்பது எனக்கு நன்றாக தெரியும். மருத்துவக்கல்லுாரிக்கு ஜனவரி முதல் வாரத்தில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். விருதுநகர் சாத்துார், அருப்புக்கோட்டை நகராட்சிகளுக்கு சேர்த்து ரூ.440 கோடி மதிப்பில் சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இனி விருதுநகரில் குடிநீர் பிரச்னையே கிடையாது. 3 நகராட்சிகளுக்கும் ஒரு நாளைக்கு 2 அரை கோடி லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட உள்ளது, என்றார். இதை தொடர்ந்து கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டமும் நடந்தது. அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நடந்த அ.தி.முக., செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: அ.தி.மு.க.,வில் இருப்பதை தொண்டர்கள் பெருமையாக நினைக்க வேண்டும்.
மக்களிடம் 'இரட்டை இலை' க்கு என்றைக்கும் தனி 'மவுசு' தான்.கட்சி உடைந்து விட்டது அ.தி.மு.க., முடிந்து விட்டது என நினைத்த தி.மு.க, நம்முடைய அடுத்தடுத்த வெற்றிகளை கண்டு திணறி போய் உள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சியை அ.தி.மு.க., கைப்பற்றுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை,''என்றார்.