நாகப்பட்டினம்: நாகை பஸ் ஸ்டாண்டில் தஞ்சம் அடைந்திருக்கும் மனநோயாளிகளின் அருவருக்கத்தக்க செயலால் மாணவியரும், பயணியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மும்மதங்களின் எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மாவட்டத்திற்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இவர்கள், நாகை பஸ் ஸ்டாண்ட் வந்து, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், திருநள்ளாறு சனி பகவான் கோவில், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயம், நாகூர் தர்கா என பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றனர்.
இரவு, பகல் எந்நேரமும் பரபரப்பாக காணப்படும், நாகை பஸ் ஸ்டாண்டில், சமீப காலமாக மனநோயாளிகள் அதிகம் சுற்றி திரிகின்றனர். இவர்களால், பஸ் ஸ்டாண்ட் வரும் பக்தர்கள், பெண் பயணியர், மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் மனநோயாளி ஒருவர், மாணவியரை பார்த்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவதோடு, அவரை விரட்ட வருபவர்களை தாக்கவும் முயற்சிக்கிறார். இதனால், யாரும் அருகில் செல்வதில்லை. பயணியர் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ள பெண் மனநோயாளி ஒருவர், பயணியரை பார்த்து விநோத ஒலி எழுப்புவதோடு, அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அர்ச்சனை செய்கிறார்.
இதுபோல், 10க்கும் மேற்பட்ட மனநோயாளிகள், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பயணியரை அச்சுறுத்தி வருகின்றனர். இது குறித்து, பல தரப்பினர், சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
'எனவே, மனநோயாளிகளை காப்பகங்களில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.