ராமநாதபுரம் : வைகை அணையின் கடைமடை பகுதியான ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை நீர் திறக்கப்பட்டும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் வராததால், 'கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை,' என்ற நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துஉள்ளனர்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நவ., 9 முதல் 16 வரை வினாடிக்கு 1,441 கன அடி திறக்கப்பட்டது.பார்த்திபனுார் மதகணையில் இருந்து கமுதக்குடி, தெளிச்சாத்த நல்லுார், உரப்புளி, களரி, சித்தனேந்தல் தடுப்பணைகளை கடந்து 8 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதிக்கு தண்ணீர் வந்தது. தொடர்ந்து நீர் வரத்து இருந்தாலும், வைகை ஆற்றுப்பகுதியில் புதர் மண்டி வரத்து கால்வாய்களை சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதாலும் நீரின் வேகம் தடைபட்டது.
வீணடிப்பு: பல இடங்களில் வைகை ஆற்றில் வந்த நீர் முறையாக ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வராமல் திசை மாறி வேறு பகுதிகளுக்கு சென்றது. காருகுடி ரெகுலேட்டர் பகுதியில் ஷட்டர்கள் பழுதால் புல்லங்குடி கண்மாய்க்கு சென்றது. தடுப்பணைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணடிக்கப்பட்டது.
3 அடி தேக்கம்: ராமநாதபுரம் பெரிய கண்மாய் பகுதியில் வைகை ஆற்றில் இருந்து வந்த தண்ணீர் தற்போது வரை 3 அடி மட்டுமே தேக்கப்பட்டுள்ளது. பெரிய கண்மாய் பகுதியில் 3 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டுமே பாசனத்திற்கு பயன்படும். பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டும், போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பகுதியில் ஒரு சொட்டு நீர் கூட வழங்கப்படாததால்ராமநாதபுரத்தில் 3962 ஏக்கர், 12,142 ஏக்கர் பாசனம் கிடைக்காத நிலையில் விவசாயிகள் வேதனை அடைந்துஉள்ளனர்.