ராமநாதபுரம், : யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்றால் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என வேளாண் இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: பருவ மழையால் நெற்பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் வரப்பெற்றுள்ளது. அக்., முடிய3534 டன் விற்பனை முடிந்துள்ளது. நவ., 13 வரை4012 டன் யூரியா உரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், தனியார் உரக்கடைகளுக்கும் வரப்பெற்று விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் உரக்கடைகளில் யூரியா அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், வேறு உரங்கள் சேர்த்து வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து உரக்கடைகளிலும் கண்காணிப்புகுழுக்கள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்புல்லாணி பகுதியில் உத்தரகோசமங்கை தனியார் உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் தேவையான உரங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் வாங்கும் போது, ஆதார் எண்ணை கொடுத்து விற்பனை முனைப்பு இயந்திரம் மூலம் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
தென்மாவட்டங்களுக்கு தேவையான யூரியா உரம் துாத்துக்குடியில் உள்ள தனியார்தொழிற்சாலை மூலம் பெறப்பட்டு வந்தது. அதில் ஏற்பட்ட பழுது தற்சமயம் சரி செய்யப்பட்டு யூரியா உரம் உற்பத்தி தொடங்கியுள்ளது. யூரியா உரம் தேவையான அளவு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.