கோவை : 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில், 'மாதிரி சாலை' அமைக்கும் திட்டத்துக்கு இன்னும் தொழில்நுட்ப அனுமதி கிடைக்காததால், தாமதமாகி வருகிறது.
கோவையில் , மோட்டார் வாகனம் இல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆறு இடங்களில், மாதிரி சாலை அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டு, கடந்த, 2016ல் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில், முதல்கட்டமாக, ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோடு, டி.வி., சாமி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய இடங்களில் 'மாதிரி சாலை' அமைக்க முடிவு செய்து, நிதி ஒதுக்கப்பட்டது.மின் புதை வடம் பதிக்க, மதிப்பீடு இறுதி செய்வதற்கு மின்வாரியம் இழுத்தடிப்பதால், திட்டத்தை செயல்படுத்துவது தாமதமாகி வருகிறது.
டி.பி., ரோட்டில் மின் ஒயர் மாற்றியமைக்க தேவையான தொகை எவ்வளவு என மதிப்பீடு செய்து, ஒப்புதலுக்காக, தலைமை பொறியாளருக்கு மின்வாரியம் அனுப்பியிருக்கிறது. தொகையை இறுதி செய்து, மாநகராட்சிக்கு தெரிவித்து, நிதி வழங்கியதும், பணிகள் துவங்கும் என்கிறார்கள், அதிகாரிகள். மின்வாரியம் இதுவரை மதிப்பீடு கொடுக்கவில்லை.இதேபோல், டி.வி., சாமி ரோடு மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதியில், மாதிரி சாலை அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி, பல மாதங்களாகி விட்டது.
மின் ஒயரை எடுத்துச் செல்வது தொடர்பாக, திட்ட அறிக்கையில் தெரிவிக்காததால், தொழில்நுட்ப அனுமதி கிடைக்கவில்லை.மாதிரி சாலை அமைக்கும் முழு துாரத்துக்கும், 'டக்ட்' (பிரத்யேக கட்டமைப்பு) அமைக்க வேண்டுமெனில், கோடிக்கணக்கில் பணம் செலவாகும். அதனால், ஏதேனும் ஒரு பகுதியில், ஆள் இறங்கி வேலை செய்வதற்கான கட்டமைப்பு ஏற்படுத்துவது, மற்ற இடங்களில், குழாயில் மின் ஒயரை கொண்டு செல்வதற்கு மின்வாரியம் உறுதி கூறியுள்ளது.
தற்போதைய சந்தை விலைக்கு மதிப்பீட்டை திருத்தித்தருமாறு, நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மதிப்பீட்டை திருத்தியமைத்தால், மீண்டும் 'டுபிட்கோ'விடம் திட்ட அறிக்கை சமர்ப்பித்து, ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், மாதிரி சாலை திட்டம் தொடர்ந்து இழுபறியாகி வருகிறது.'மாதிரி சாலை' அமைக்க, மின் ஒயர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கே மாதக்கணக்கில் ஆகிவிட்டது. இனி, துறை ரீதியாக அனுமதி பெற்றதும், திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.-மாநகராட்சி அதிகாரிகள்