| மதுரையை சேர்ந்த 6 பேரிடம் ரூ.79 லட்சம் மோசடி Dinamalar
மதுரையை சேர்ந்த 6 பேரிடம் ரூ.79 லட்சம் மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
07:51

பெரம்பலூர்: மதுரையைச் சேர்ந்த ஆறு பேரிடம் 78.80 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற மூவரை பெரம்பலூர் போலீசார் தேடி வருகின்றனர்.


மதுரையைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் உட்பட ஆறு பேரிடம் பெரம்பலூரைச் சேர்ந்த மூன்று பேர் 2000 ரூபாய் நோட்டுகளை அரசு விரைவில் தடை செய்ய உள்ளதாகவும் அவற்றை 10 சதவீதம் கூடுதல் தொகையுடன் 500 ரூபாயாக மாற்றி தருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து மதுரையைச் சேர்ந்த ஆறு பேர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு 78.80 லட்சம் ரூபாயை 2000 ரூபாய் நோட்டுகளாக இரு கார்களில் எடுத்து வந்துள்ளனர். பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு கீழே காரை நிறுத்தி பணத்தை மாற்றித் தருவதாக கூறிய கும்பலுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.இரவு 11:00 மணிக்கு வெள்ளை பொலீரோ ஜீப்பில் பெரம்பலூரைச் சேர்ந்த மூவரும் அங்கு வந்தனர். 'உங்களிடம் உள்ள பணத்தை தாருங்கள்; பாலத்தின் மேற்பகுதியில் எங்களது காரில் பணம் உள்ளது. இந்த பணத்தை வைத்து அங்கிருந்து பணத்தை எடுத்து வருகிறோம்' எனக் கூறியுள்ளனர். மதுரையைச் சேர்ந்தவர்கள் 78.80 லட்சம் ரூபாயை அவர்களிடம் கொடுத்துள்ளனர். பணத்துடன் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் அவர்களின் அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது 'ஆப்' செய்யப்பட்டிருந்தது. பணத்தை பறிகொடுத்தவர்கள் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் பணத்தை பறித்தது பெரம்பலூர் பாப்பாங்கரை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரிந்தது. சுரேஷ் ஏற்கனவே 'ஆன்லைன்' மோசடியில் கைதாகி சிறையில் இருந்தவர். மூவர் கும்பலை தேடி வருகின்றனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X