குளித்தலை: பாலவிடுதியில் அனுமதியின்றி போலீஸ் ஸ்டேஷன் முன் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். குளித்தலை தாலுகா, பாலவிடுதி பஞ்., கவரப்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். உடலை கொண்டு செல்ல வழித்தடம் கோரி, போலீஸ் ஸ்டேஷன் முன், உடலை வைத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி., பாண்டியராஜன், சப்- கலெக்டர் ?ஷக் அப்துல் ரஹ்மான் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து, வேறு வழியாக கொண்டு செல்லப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது, பால விடுதி சப் - இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் கொடுத்த புகார்படி, அப்பகுதியை சேர்ந்த சுதாகர், ராஜேந்திரன், சக்திவேல், கருப்பையா, கண்ணன், ராமர், சிந்து, ராஜா, முனியப்பன், சோமன், பிச்சை, ஜோதி, குமார், முத்தையா, சின்னையா, பிரபு உட்பட, 15க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.