| அகல் விளக்கு தயாரிப்பவர்கள் வாழ்வில் ஒளி கிடைக்குமா! மண் அள்ளும் அனுமதிக்காக போராட்டம் Dinamalar
அகல் விளக்கு தயாரிப்பவர்கள் வாழ்வில் ஒளி கிடைக்குமா! மண் அள்ளும் அனுமதிக்காக போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 நவ
2019
23:45

உடுமலை: போதிய லாபம் இல்லாவிட்டாலும், பாரம்பரியத்தை கைவிடாமல், அகல் விளக்கு தயாரிக்கும் குடும்பங்கள், வாழ்வாதாரத்துக்கு, குளங்களில், மண் அள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.



உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிராமந்தோறும், மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர் குடும்பங்கள் இருந்தன. மண்பானைகளுக்கு வரவேற்பு குறைவு; மண் எடுப்பதில் சிக்கல்; நிலையான வருவாய் இல்லாதது உட்பட காரணங்களால், பலர், மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். புக்குளம் உட்பட கிராமங்களில், மட்டும், போதிய லாபம் கிடைக்காவிட்டாலும், பாரம்பரியத்தை கைவிடாமல், மண்பானை, அகல் விளக்கு, உருவார பொம்மைகள் தயாரிப்பில், சில குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான அகல் விளக்குகள் தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில், சிறிய விளக்கு, ஒரு ரூபாய்க்கும், பெரிய விளக்கு, 5 ரூபாய் வரை விற்பனையாகிறது. நாள்முழுவதும், குடும்பத்தில் இருவர் வேலை செய்தாலும், 400 ரூபாய்க்கும் குறைவான வருமானமே இவர்களுக்கு கிடைக்கிறது. அகல் விளக்கு மற்றும் பானைகள் செய்ய, மண் தேர்வு முக்கியம். கிணத்துக்கடவு கோதவாடி குளம் மற்றும் கொழுமம் குளத்தில் மட்டுமே, மண்பாண்ட தயாரிப்புக் கான வண்டல் மண் கிடைக்கிறது. தேவையான மண்ணை டிராக்டர்கள் மூலம் எடுத்து வந்து இருப்பு வைத்தால், ஆண்டு முழுவதும், உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். ஆனால், மண் அள்ள, வருவாய்த்துறையினர் அனுமதி அளிக்காததால், ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. மண் எடுத்து வரும் செலவுக்கேற்ப, மண்பாண்டங்கள் விற்பனையாவது இல்லை; இதில், அனுமதியும் கிடைக்காத போது, மண்பாண்டத் தொழிலாளர்கள் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.புக்குளம் மண்பாண்ட தொழிலாளர்கள் கனகராஜ், ரேணுகாதேவி கூறியதாவது: பீங்கான் அகல் விளக்குகள் வருகைக்கு பிறகு, மண் விளக்குகளை யாரும் ஆர்வத்துடன் வாங்குவதில்லை. இருப்பினும், கிராம மக்களின் தேவைக்காக, சீசனில் மட்டும், விளக்கு உற்பத்தி செய்கிறோம். பிற நாட்களில், குடும்ப தேவைக்காக விவசாய கூலி வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. குளங்களில் மண் எடுக்க அதிகாரிகள் உறுதியளித்தாலும், அதற்கான அனுமதி கடிதம் வழங்குவதில்லை.



இதனால், மண் எடுக்க முடியாமல், தொழில் முடங்குகிறது. மண்ணில், மண்பானை, அகல்விளக்கு, உருவார பொம்மைகள் செய்வது தனிக்கலையாகும். லாபம் இல்லாவிட்டாலும், எங்களது முன்னோர்கள் காட்டிய வழிமுறையின்படி, சீசன்களின் போது மட்டும், இப்பணியை விடாமல் மேற்கொள்கிறோம். நலவாரியத்தில் எங்கள் குடும்பத்தினரை உறுப்பினராக்கி, நலத்திட்டங்களை அரசு வழங்கினால், உதவியாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X