பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே கவுசிகா நதி தடுப்பணையில், நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி நிர்வாகமே குப்பை குவிப்பதால், நதி குப்பை தொட்டியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கவுசிகா நதி, கோவை வடக்கு குருடிமலையில் உற்பத்தியாகி, குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் உள்ள தன்னாசி, தாலமடல் ஓடைகளை இணைத்து சுமார், 60 கி.மீ., துாரம் கடந்து, திருப்பூர் அருகே சுல்தான் பேட்டை நொய்யலில் கலக்கிறது.இந்நதி, அந்தந்த பகுதிகளில் வண்ணத்தங்கரை, பெரும்பள்ளம் என, பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. கவுசிகா நதி நீர்வழிப்பாதை, 60க்கும் மேற்பட்ட பெரிய ஊர்கள் வழியாக செல்கிறது. பருவமழை காலத்தில் இந்நதியில் செல்லும் நீரால் நிலத்தடி நீர் பெருகி, அந்தந்த பகுதி விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ளது. நரசிம்மநாயக்கன் பாளையம் பகவான் கார்டன் அருகே செல்லும் இந்நதி வறண்டு காணப்படுகிறது. இந்நதியோரம் நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா செயல்படுகிறது.இதில், ஏற்கனவே குப்பையை கொண்டு வந்து மலை போல் கொட்டி வருகின்றனர். இரவு நேரத்தில் குப்பைக்கு சமூகவிரோதிகள் வைக்கும் தீயால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.இப்பகுதி கவுசிகா நதியில் உள்ள தடுப்பணையில், பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீர் தேங்கி, இப்பகுதியில் நிலத்தடி நீர் பெருக வாய்ப்பாக இருந்தது. தற்போது, தடுப்பணை அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையை பேரூராட்சி நிர்வாகமே குவிப்பதால், பராம்பரியமிக்க கவுசிகா நதி குப்பை தொட்டியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:இரவு நேரத்தில் டிராக்டர் மற்றும் லாரிகளில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை கொண்டு வரும் லாரி, டெம்போ உள்ளிட்ட வண்டிகளை நாங்களே தடுத்து நிறுத்தி வருகிறோம். உள்ளூரில் நீர் நிலைகளை காக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகமே, கவுசிகா நதி தடுப்பணை பகுதியில், குப்பையை கொட்டிச் செல்கிறது. வேலியே பயிரை மேயும் அவலம் நீடிக்கிறது.நதியோரம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் வளம் மீட்பு பூங்காவில் குப்பை குவிக்கப்பட்டுள்ளன. அதில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் எதையும் செயல்படுத்தாமல் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'வளம் மீட்பு பூங்காவில் மட்டும் குப்பை கொட்டப்படுகிறது. கவுசிகா நதியில் குப்பை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.