புதுச்சேரி : மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, நேற்று துவங்கியது.
இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில், புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை, ஆண்டுதோறும் மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியினை நடத்தி வருகிறது.இந்தாண்டிற்கான மண்டல அறிவியல் கணகாட்சி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 18ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடந்தது. இதில் சிறந்த படைப்புகள், மாநில அளவிலான கண்காட்சிக்கு தகுதி பெற்றன.மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, நேற்று துவங்கியது. பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு துவக்கி வைத்து, பார்வையிட்டார். நிகழ்ச்சியில் இணை இயக்குனர் குப்புசாமி, ஒருங்கிணைப்பாளர் மோகன் பிரசாத், பள்ளி முதல்வர் சிவகாமி, துணை முதல்வர்கள் சந்திரசேகரன், ஆல்பர்ட் தொம்னிக் ராயன், பூபதி கலந்து கொண்டனர்.கண்காட்சியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மண்டலங்களில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 110 சிறந்த அறிவியல் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.கண்காட்சியை காலை 10.௦௦ மணி முதல் மதியம் 1.௦௦ மணி வரை வில்லியனுார் கொம்யூன் பள்ளிகள் பார்வையிட உள்ளனர். மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை பொதுமக்கள் பார்வையிடலாம்.மாலை 5.௦௦ மணிக்கு நடக்கும் நிறைவு விழாவில், முதல்வர் நாராயணசாமி, கல்வியமைச்சர் கமலக்கண்ணன் பங்கேற்று, பரிசு வழங்குகின்றனர்.