அரியலூர்: அரியலூர் அருகே, தொடர் மழை காரணமாக, இடுப்பளவு தண்ணீரில், பிணத்தை மயானத்துக்கு தூக்கிச் சென்றனர். 'மயானத்துக்கு பாதை வசதி மற்றும் ஓடையின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும்' என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர், உடையார்பாளையம் அருகே, கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி என்பவரின் மனைவி கோசலம், 83; உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் இரவு இறந்தார். கோசலத்தின் இறுதிச் சடங்கு, நேற்று மதியம் நடந்தது. கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள நைனார் ஏரிக்கு அருகே உள்ள மயானத்துக்கு, கோசலத்தின் உடலை, உறவினர்கள் தூக்கிச் சென்றனர். இப்பகுதியில், சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, நைனார் ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஓடையில், இடுப்பளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு புறத்தில் உள்ள கோசலத்தின் வீட்டில் இருந்து, கிழக்கு பகுதியில் உள்ள மயானத்துக்கு, நைனார் ஏரி ஓடை தண்ணீரில், சடலத்தை சுமந்தபடி இறங்கி நடந்து, மயானத்தை அடைந்தனர். அங்கு, கோசலத்தின் உடல் புதைக்கப்பட்டது.
கோசலத்தின் உறவினர் வேலுமணி, 50, கூறியதாவது: நைனார் ஏரியின் மேற்கே கிராமமும், கிழக்கே மயானமும் உள்ளது. எனக்கு விபரம் தெரிந்ததில் இருந்தே, மழை காலங்களில் வெள்ளம் வரும் போது, இவ்வாறு ஓடை தண்ணீரில் இறங்கி, பிணத்தை தூக்கிச் சென்று வருகிறோம். அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம், 20 ஆண்டுக்கும் மேலாக கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த ஆண்டும் இதேபோல், மழை காலங்களில் ஒருவர் இறந்தார். அப்போதும், ஓடையை கடந்து சென்று பிணத்தை புதைத்து வந்தோம். பிணத்துடன், ஓடையை கடக்கும்போது, வெள்ளம் கூடுதலாக வந்தால், நிலைமை மோசமாகி விடும். எனவே, அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, மயானத்துக்கு பாதை வசதி செய்து தருவதோடு, ஓடையின் குறுக்கே பாலமும் கட்டித்தர வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.