சேலம்: ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க, மாநில நிர்வாகிகள் கூட்டம், திருச்சியில், நேற்று முன்தினம் நடந்தது. பொதுச் செயலர் செல்வன் தலைமை வகித்தார். அதில், மத்திய அரசின் மருந்து கடையில் கிடைக்கும் மலிவு விலை மருந்துகளை, அனைத்து தனியார் மருந்து கடைகளிலும் விற்க, வினியோகிக்க வேண்டும்; சில்லரை வர்த்தகத்தில் ஆன்லைன் வணிகத்தை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 17ல், தமிழ்நாடு சங்க பேரமைப்பு சார்பில் நடக்கும் போராட்டத்துக்கு, சங்கம் ஆதரவளிக்கிறது. அகில இந்திய அளவில், ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு சட்டம் இயற்றப்படாத நிலையில், தொடர்ந்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பதை வன்மையாக கண்டிப்பதோடு, அதற்கு தடை விதிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் மனோகரன், பொருளாளர் இளங்கோவன் உள்பட, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.