| ஜி.ஹெச்., கட்டுமான பணி நிறுத்தம்: அரசின் நிதிக்கு காத்திருக்கும் பரிதாபம் Dinamalar
ஜி.ஹெச்., கட்டுமான பணி நிறுத்தம்: அரசின் நிதிக்கு காத்திருக்கும் பரிதாபம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 டிச
2019
08:25

ஓமலூர்: ஓமலூர் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணி, அரசு நிதியை எதிர்பார்த்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.


ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு, புது கட்டடம் கட்ட, அரசு ஒப்புதல் வழங்கி, 2018 செப்., 10ல், ஐந்து கோடியே, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. அதே ஆண்டு, டிசம்பரில், கட்டுமானப் பணி தொடங்கியது. தற்போது, தரைத்தளம், முதல் தளம், சாய்தளங்கள், படிக்கட்டுகள் கட்டப்பட்டு, இரண்டாம் தளத்தில், பாதியளவில் அறைகள் கட்டப்பட்டு, பணி நிறுத்தப்பட்டுள்ளது. சில மாதத்துக்கு முன், ஓமலூர் அரசு மருத்துவமனையில், சுகாதாரத்துறை அரசு செயலர் பீலாராஜேஸ் ஆய்வு மேற்கொண்டபோது, ஒப்பந்ததாரர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை விடுத்தனர்.


இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது ஒதுக்கிய நிதியில், கட்டடங்கள் கட்டப்பட்டு, உள் பூச்சு வேலை, படிக்கட்டு, குழாய், ஜன்னல், ஒயர் அமைக்கும் பணி நடக்கிறது. கூடுதலாக, 84 லட்சம் ரூபாய் கேட்டு, அரசுக்கு, பொதுப்பணித்துறை சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மே மாதத்துக்குள், கட்டடத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து ஒப்படைக்கவுள்ளோம். மீதி தொகை வந்தவுடன், கட்டுமானப் பணி தொடங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஒப்பந்ததாரர் கந்தசாமி கூறுகையில், ''நிதி கிடைத்ததும், பணியை விரைவில் முடித்து ஒப்படைக்கப்படும். ஐந்து மாடி கட்டடம் கட்டும்படி அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X