மஞ்சள் மாநகரில் காலைக்கதிரின் 'வெற்றியின் ரகசியம்': ஆர்வத்துடன் குவிந்த மாணவ, மாணவியர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
08:38

ஈரோடு: ஈரோட்டில், 'காலைக்கதிர்' நடத்திய, 'வெற்றியின் ரகசியம், ஜெயிப்பது நிஜம் 2.0' நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் வந்த மாணவ, மாணவியர், புது பாடத்திட்டத்தில் சாதிக்கும், ரகசியம் அறிந்து, உத்வேகம் பெற்றனர்.


'காலைக்கதிர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எளிதில் எதிர் கொள்ளவும், புது பாடத்திட்டத்தை அணுகும் முறை குறித்த விளக்கம் பெற்றும், சாதனையாளர்களாக மாற, தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சியாக, 'வெற்றியின் ரகசியம், ஜெயிப்பது நிஜம் 2.0' அமைந்துள்ளது. அமிர்தா விஸ்வ வித்யா பீட நிறுவனத்துடன், 'காலைக்கதிர்' நாளிதழ் இணைந்து, ஈரோடு சம்பத் நகர், கொங்கு கலையரங்கத்தில், நேற்று நடத்திய நிகழ்ச்சிக்கு, காலை முதலே மாணவ, மாணவியர் வரத்துவங்கினர். பெற்றோரும், ஆசிரியர்களும் வந்தனர். முதலில் வந்த மாணவி எஸ்.உமா மகேஸ்வரி, அமிர்தா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார், பொள்ளாச்சி கோமங்கலம் புதூர் முதுகலை ஆசிரியர் தியாகராஜன், மனநலம் மற்றும் உடல் நல ஆலோசகர் அமுல்ராஜ், 'காலைக்கதிர்' பொது மேலாளர் ஜெரால்டு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு முக்கிய வினாக்கள், குறிப்புகள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டன. ஈரோடு நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெள்ளோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகப்பட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கலைமகள் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளி, ரயில்வே காலனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, யூ.ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யா பவன் பள்ளி, ரங்கம்பாளையம் மீனாட்சிசுந்தரனார் மேல்நிலைப்பள்ளி உட்பட பல்வேறு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


'தேவையை தீர்மானிக்க வேண்டும்': மனநலம் மற்றும் உடல் நல ஆலோசகர் அமுல்ராஜ் பேசியதாவது: வாழ்வில் வெற்றி பெற பல முக்கிய பண்புகளை, ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வயதிலும், 'எது முக்கியம்' என்ற கேள்விக்கான விடை மாறுபடும். படிக்கும் வயதில், நண்பர்கள், 'டிவி', மொபைல் போன், தேவையற்ற பொழுது போக்கு, நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். பெற்றோரின் வழிகாட்டுதலுடன், ஆசிரியர்கள் கூறும்படி கல்வியை கற்றால், சிறந்த உயர் கல்வி, வேலை வாய்ப்பை பெற்று, நல்ல நண்பர்கள், நமக்கான குடும்ப சூழலை உருவாக்க முடியும். படிக்கும் காலத்தில், நமக்கு என்ன வேண்டும் என்பதை நாமும், பெற்றோரும் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். நமது நண்பர்கள் படிக்கிறார்கள், விரும்புகிறார்கள், சொல்கிறார்கள் என்பதற்காக, நாம் ஏற்று நடந்தால், தோல்வி அடைய நேரிடும். நமது குடும்பமே, நமது வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரும் என்பதையும் உணர வேண்டும். குறைந்த நாளில் தேர்வை எழுதவுள்ள நிலையில், தொடர்ந்து படிக்க வேண்டும். பயம், சந்தேகம், குழப்பம் போன்றவைகளை தவிருங்கள். மனம், அறிவு, உடலை சீராக, அமைதியாக வைத்திருந்தால், சிறந்த முறையில் தேர்வு எழுத முடியும். தேர்வு எழுதிய பின், எதிர்மறையாக சிந்திப்பதைவிட, நேர்மறையாக என்ன செய்ய வேண்டும், என திட்டமிடுங்கள். தேர்வுக்கு தயாராகும்போது, உங்கள் பலவீனங்களை எதிர்த்து போராடினால் மட்டுமே வெற்றியை பெற முடியும்.


'தரமான கல்வி, வேலை வாய்ப்புக்கு அமிர்தா': அமிர்தா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார் பேசியதாவது: படிக்கும்போது, சந்தேகம், பயம், தயக்கத்தை தவிர்த்து, தெளிவாக படிக்க வேண்டும். தேவையான துணை பாடங்கள், இணைய தளங்கள் மூலம், அவற்றை முழுமையாக அறிந்து, கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் படிக்க வேண்டியதில்லை. கருத்தை புரிந்து படித்தால் வெற்றி பெற முடியும். படிக்கும்போதும், தேர்விலும் நேர மேலாண்மையை கடைபிடித்தால், முழுமையாக படிக்க, தேர்வை எழுத முடியும். என்ன படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என திட்டமிட்டு, எழுதி படித்தால் நல்ல பலன் தரும். பொதுத்தேர்வுக்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், உயர் கல்விக்கு எந்த கல்லூரியை தேர்வு செய்வது என்பதை என்.ஐ.ஆர்.எப்., என்ற 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரேங்கிங் பிரேம் ஒர்க்' இணையதளத்தை பார்க்கலாம். ஒவ்வொரு கல்லூரி, பல்கலை கழகத்திலும் உள்ள நவீன வசதிகள், பாடத்திட்டம், கல்வி பிரிவுகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமிர்தா பல்கலை கழகம், தேசிய அளவில் எட்டாவது இடத்திலும், தனியார் கல்லூரி, பல்கலை கழக தர வரிசையில் முதலிடத்திலும் உள்ளது. இக்கல்லூரி இணைய தள முகவரியில் சென்றால், உங்களது தகுதியை புரிந்து கொள்ளும் வகையிலான தேர்வு உள்ளது. அதை எழுதினால், நீங்கள் எந்த பாடத்தை தேர்வு செய்வது, அவை எங்குள்ளன, அதற்கான வழிமுறைகளை அறியலாம். தரமான கல்வி, வேலை வாய்ப்புக்கான பல்வேறு வாய்ப்புக்களை உருவாக்கி வழங்குவதால், அமிர்தா பல்கலை கழகம், தேசிய தர வரிசை பட்டியலில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.


'சுய கற்றலை வலிமைப்படுத்தும் புது பாடத்திட்டம்': பொள்ளாச்சி, கோமங்கலம்புதூர் உயிரியல் முதுகலை ஆசிரியர் தியாகராஜன் பேசியதாவது: பொது தேர்வு, போட்டி தேர்வு என இரு வகையான தேர்வு முறையையும், புது பாடத்திட்டத்தில் கொண்டு வந்துள்ளனர். சி.பி.எஸ்.சி.,- என்.சி.ஆர்.டி., பாடத்திட்டங்களுக்கு மேலான பாடத்திட்டம் வகுத்ததால், புத்தகம் பெரிதாக உள்ளது. படிப்பதில் புரியாததை ஸ்டடி மெட்டீரியல், வினா - விடை தொகுப்பு, குறுகிய விடை தொகுப்பு மூலம் படிப்போம். அல்லது கூடுதலாக தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போகும். அவற்றை சரி செய்யும் விதமாகவே, புதிய பாடத்திட்டம் குறித்து டி.என்.எஸ்.சி.ஆர்.டி., சேனலில் யு-டியூப், இணைய தள இணைப்புகள் மூலம், கூடுதல் தகவல், உதாரணங்களை அறியும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீட், ஜே.இ.இ., ஐ.ஐ.எம்., போன்ற பல உயர் கல்வி தேர்வுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களில் இருந்து, சரி பாதி கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே, பிளஸ் 2 தேர்வு வரை தற்போதைய பாடத்தை படிக்க வேண்டும். விடுமுறையின் போது, பிளஸ் 1 புத்தகத்தை படிக்க வேண்டும். புதிய பாடத்திட்டத்தில் வரும் புத்தகங்களை, அடுத்தடுத்த ஆண்டுகளில் யாரிடமும் கொடுத்து விடாதீர்கள். நீங்கள் எழுதப்போகும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் அவை உதவும். இந்நூலில் உள்ள க்யூ.ஆர்., கோடு, இணையதள இணைப்புகளில், கேள்வி - பதில் மாதிரிகள் உள்ளன. அவை, தேர்வை எதிர்கொள்ள உதவும். இவற்றை படித்தாலும், கேள்விகளை புரிந்து, பதிலை எழுத கற்று கொள்ளும் வாய்ப்பை, இந்நூல் தருகிறது. சுய கற்றலை புது பாடத்திட்டம் வலிமைப்படுத்தும். பொதுத்தேர்வில், அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதுங்கள். வினா எண், சரியான விடையை மட்டும் எழுதுங்கள். அதிகமாக எழுத வேண்டிய அவசியமில்லை. உதாரணம், படங்கள், வழிமுறைகள், செய்முறை போன்றவை குறிப்பிட கேட்டிருந்தால், அதை சரியாக எழுத வேண்டும். கட்டாய கேள்விக்கு கட்டாயமாக பதில் தர வேண்டும். தேர்வுக்குப்பின், மற்றவர்களுடன் விவாதித்து, மனதை கலங்க செய்தால், அடுத்த தேர்வுக்கு தயாராக முடியாது. தேர்வுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால், படிக்கும்போது அடிக்கோடிட்டு படித்தால், திரும்பி பார்க்கும்போது, முக்கிய பகுதியை படித்து நினைவூட்டலாம். புதிதாக தேவையற்ற புத்தகங்களை படித்து குழப்பம் அடைய கூடாது. படித்ததை எழுதி பாருங்கள். சுய தேர்வு எழுதி, மதிப்பீடு செய்து பார்த்தால், எழுதும் திறன் அதிகரிக்கும். விடையை சிறு, சிறு வாக்கியங்களாக, அடித்தல், திருத்தமின்றி, தெளிவாக எழுதுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


மாணவர்கள் கருத்து


புது பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், வினாக்கள் எவ்வாறு கேட்கப்படும், விடையை எப்படி அளித்தால், முழு மதிப்பெண் பெறலாம் என்ற சந்தேகம் இருந்தது. இந்நிகழ்ச்சியில், முழு வினாக்களுக்கும் எவ்வாறு விடையளித்தால், முழு மதிப்பெண் பெற முடியும் என்பதை பட்டியலிட்டு காண்பித்தது பயனுடையதாக இருந்தது. தவிர பொதுத்தேர்வு, வினா - விடை, தேர்வு நேர மாற்றங்கள் குறித்து விளக்கியதும் சிறப்பாக அமைந்தது.


- எல்.முகமது செமீர், நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.


பொதுத்தேர்வை எழுதும்போது, என்ன பயன்படுத்தலாம், எவ்வாறு விடை அளிக்க வேண்டும் என்பதை வீடியோ பதிவுகள் மூலம் விளக்கினர். தேர்வை எதிர் கொள்ளும் முறை, பல சந்தேகங்களுக்கு டி.என்.எஸ்.சி.ஆர்.டி., தளத்தில் விளக்கம், வீடியோ பட தொகுப்பு, மாதிரிகளை அறியலாம் என விளக்கம் பெற உதவிய 'காலைக்கதிருக்கு' பாராட்டுக்கள்.


- டி.சஞ்ஜெய், பாரதி வித்யா பவன், ஈரோடு.


'வெற்றியின் ரகசியம்' நிகழ்ச்சியில் தேர்வு, மனநலம், எதையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தை வழங்கும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'காலைக்கதிர்' நடத்திய நிகழ்ச்சி மிகுந்த நம்பிக்கை, பொதுத்தேர்வை குழப்பமின்றி எழுத உதவி புரிந்துள்ளது. இங்கு கிடைத்த பெரும்பாலான தகவல், இதுவரை எனக்கு தெரியாததாக இருந்ததால், மூன்று மணி நேர நிகழ்ச்சி, மிகுந்த பலன் தந்தது.


- டி.கீர்த்தனா, அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளோடு.


சந்தேகம், தயக்கம், தோல்வி பயத்தை தவிர்த்தால் மட்டுமே, பொதுத்தேர்வில் சிறந்த வெற்றி பெறுவதுடன், வாழ்க்கையின் சவால்களை வெல்ல முடியும் என்பதை, இந்நிகழ்ச்சி மூலம் அறியும் வாய்ப்பு கிடைத்தது. தேர்வை நினைத்தால் பயமான, சோர்வான மனநிலையில் இருந்த என் போன்ற பலருக்கும், இந்நிகழ்ச்சி சிறந்த நம்பிக்கையை அளித்தது.


- எஸ்.கலையரசி, செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.


பெற்றோர் கருத்து


பிளஸ் 1, பிளஸ் 2 என இரு வகுப்பு பாடங்களையும் படித்தால் மட்டுமே நீட், ஜே.இ.இ., போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறலாம். நெகடிவ் மதிப்பெண்ணை தவிர்க்க, சந்தேக வினாக்களுக்கு பதில் அளிக்காமல் தவிர்க்கும் யோசனை, புது யுக்தியாக அமைந்தது. தவிர, உளவியல் ரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்திய 'காலைக்கதிர்' நாளிதழ், இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர வேண்டும்.


- பி.கிஷோர்குமார், சங்ககரி.


மூன்று மணி நேர நிகழ்ச்சி, முழுமையான சந்தேகங்களுக்கும் தீர்வாக அமையும் என்பதை, 'காலைக்கதிரின்' நிகழ்ச்சி மூலம் அறிந்தேன். பெரிய புத்தகம், இன்னும் குறைந்த நாட்களே உள்ளது என அச்சமான நிலையில் இருந்த, என் போன்ற பெற்றோருக்கு, எவ்வாறு திட்டமிட்டு, குழந்தைகளை படிக்க வைக்கலாம் என, பட்டியல் போட்டு ஆசிரியர்கள் விளக்கியது, பேருதவியாக இருந்தது.


- எஸ்.அனிதா, ஈரோடு.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X