அனந்தகிருஷ்ணன் கட்டுரை 3: புத்திர சோகம்! எக்கச்சக்க சிரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
02:08

எங்க ஊர் ஆளுங்களிடம், எத்தனை கோபமும், வீரமும், குசும்பும், வாய் சவடாலும் உண்டோ, அதைவிட ஓரிரு மடங்கு, கேனத்தனங்களும் உண்டு. சமயங்களில், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கோமாளித்தனமாக அவர்களின் செயல்கள் இருக்கும்.நெல்லை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்தில், அக்கா, தங்கைகளை மணந்தனர் இருவர். பெண்களும், பையன்களும் அருகருகே உள்ள கிராமங்களில் வசித்தனர். ஒருவன் படித்து, கோப்ரேட்டிவ் ஸ்டோரில் வேலை பார்ப்பவன். மற்றவன், படிக்காத முரடன், குட்டையன். ஆனாலும், வழக்கமான சகலை முறுக்கு அதிகம். ஆரம்பம் முதலே இருவருக்கும் பனிப்போர் தான்.ஏதோ ஒரு கல்யாணத்தில், சீர்வரிசை பற்றி பேசும் போது, இருவருக்கும் இடையே பேச்சு முற்றி, கைகலப்பு வரை போய் பேச்சு, 'கட்!' ஆனாலும், அக்கா, தங்கை போக்குவரத்து, கணவன்மார்கள் அறியா வண்ணம் இருந்து வந்தது. குட்டையனுக்கு அடுத்தடுத்து இரு குழந்தைகள் பிறந்து, முதல் குழந்தை, 1 வயதிலும் அடுத்தது, 3 வயதிலும் இறந்து விட்டன. இரண்டாவது ஆள், நிதானமாக ஒரே பையன் மட்டும் பெற்று, அதற்குபின் நான்கு ஆண்டுகள் கழித்து, நிறைசூலியாக அவள் மனைவி இருந்தாள்.அப்போது, அக்கா, தன் தங்கைக்கு ஏதோ செய்யப் போக, அவள் கணவன் பார்த்து ரொம்ப டீஸண்டாக, 'உன் புருஷனுக்கும் எனக்கும் சரியில்லை. அதனால, நீ என் வீட்டிற்கு வராதே...' என்று அனுப்பி விட்டான்.கணவனுக்கு தெரியாமல், தான் செய்த பண்டங்களுடன் அந்த அக்கா வீடு திரும்புகையில், அவளின் கணவன் குட்டையன் அவளை வழியில் பார்த்து விட்டு விசாரிக்க, அவள் நடந்ததை கூற, அவள் கொண்டு சென்ற பெட்டியை கீழே தள்ளி, அதிலிருந்த பண்டங்கள் அத்தனையையும் ரோட்டில் போட்டு, காலால் நசுக்கி, தேய்த்து, சருவச் சட்டியாலும், துாக்குச் சட்டியாலும் அடித்து, மண்டையை ரத்த விளாறாக்கி விட்டான்.அடுத்து, கோபம் சகலை மீது திரும்பியது. பக்கத்து கிராமத்தில் இருந்த சகலைக்கு கேட்கும் என, கற்பனை செய்து கொண்டு, 'ஏல... எம்பொண்டாட்டிய வீட்டுக்குள்ள வராதேன்னியாமே. நீ யாருல, அவள வீட்டுக்குள்ள வராதேன்னு சொல்லுததுக்கு. நானே, என் பொண்டாட்டிய என் வீட்டுக்குள்ள வராதேன்னு சொல்ல மாட்டம்ல. எம் பொண்டாட்டிய, நீ ஏம்ல சொல்லுத. ஏல அவா, அவா தங்கச்சி வீட்டுள்ள போவுறத தடுக்கதுக்கு நீ யாருலே. நானே எம் பொண்டாட்டியை வீட்டுக்குள்ள வராதன்னு சொல்ல மாட்டம்ல. நீ யாருல சொல்லுததுக்கு யாருல...' என, பேசியதையே திரும்ப திரும்ப பேசி ரகளை செய்தான்.ஒரு கட்டத்தில், அவனை சுற்றி நின்று சமாதானம் செய்து கொண்டிருந்த கிராமத்தார், அலுத்துப் போய் கலைந்து சென்றனர். பழரசம், அதாவது, மதுபானம், இரண்டு பாட்டில் ஏற்றிக் கொண்டதால் நாற்றம் தாங்க முடியாமல், குட்டையன் மனைவி, குச்சு வீட்டில் சென்று படுத்து கொண்டாள். குட்டையனுக்கு குழந்தைகள் இல்லாத ஏக்கம், தனிமை, இயலாமை, அவமானம் எல்லாம் சேர்ந்து அழுத்த, ஒரு முடிவு எடுத்தான்.'வாய் இருக்கறதுனால தான நீ பேசுத; அதைக் கிழித்து கொள்ளி வைத்து விட்டால் பேசுவியா?' என சொல்லிக் கொண்டான். கத்தியை எடுத்துக் கொண்டு, பக்கத்து ஊருக்கு கிளம்பினான். புருஷன் எங்கேயோ போகிறான் என்பதை கவனித்தவள். ஆமா... எங்க போயிரப் போறான்; அம்மங்கோவில் குளம் வரைக்கும் போய், அங்க படுத்திருந்து, காலைல வரப் போகுது. போகட்டும்... என்று விட்டாள்; படுத்து உறங்கியும் போனாள்.காலையில் அலறிப் பதறி, கயத்தாத்தா எனப்படும், கயத்தாறு என்ற ஊரிலிருந்து வந்து, இந்த கிராமத்தில் வாழ்க்கைப்பட்டவள், ஓடி வந்து, 'ஒம்புருஷன் பக்கத்துாருல, ஒந்தங்கச்சி வீட்டுல இருக்கானாம்' என்றதும், கிழவனையும் கூட்டிக் கொண்டு ஓடினாள். தங்கை வீட்டுக்கு நேர் எதிர் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தான், குட்டையன்.எதிரே கத்தியை தரையில் சொருகி வைத்து, அதைப் பார்த்து அழுதபடி இருந்தான். ஓ... ஏதேனும் விபரீதம் நடந்துருச்சா என, நினைத்தாள். அங்கே திண்ணையில் தங்கச்சி, அவள் புருஷன், அவன் அப்பா, அம்மா, உறவினர்கள் அமர்ந்திருந்தனர். ஊர்ப் பெரியவர்கள் ஏதேதோ பேசியபடி இருந்தனர்.நடந்தது இது தான்...இரவோடு இரவாக, சகலையை தீர்த்து விடுவது என்று, சகலை வீட்டுக்கு பின்புறம் வழியே ஏறிக் குதித்து, புழக்கடைக்கு சகலை வந்ததும், சதக் சதக் என்று, பேசிய வாயிலும், நீட்டிய கையிலும், மாறி மாறிக் குத்தி கொல்ல வேண்டும் என, குட்டையன் நினைத்து கொண்டான்.அப்போது கதவு திறக்க, புள்ளத்தாச்சி கொளுந்தியாள் மட்டும், வெளிக்கிருக்க வர, சட்டென்று மறைந்து கொண்டான். அவள் ஏதோ சலசலப்பை அறிந்து, பாம்பு என்று எண்ணி, மிலிட்டரி அண்ணனை கூப்பிட உள்ளே செல்ல, அப்போது, தங்கையின் மகன், மழலை பேசியபடி அங்கே வந்திருக்கிறான். அவனைப் பார்த்ததும், குட்டையனுக்கு இறந்து போன தன் இரண்டாவது மகனின் நினைவு வந்து விட்டது.'அவன் இருந்தான்னாக்கி இப்படித் தான் இருந்திருப்பான்; இங்கிலிஷ் படிச்சுருப்பான்; போய்ட்டான். கிளவி பேச்சைக் கேட்டு, அவன் அப்பன் பேர வெச்சேன். போயிட்டுது...' என, தனக்குள் பேசிக் கொண்டு, அவனருகில் செல்ல, பையன் இவனைப் பார்த்து, 'பெரீபா...' என்று அழைக்க, அது உள்ளே கேட்டு, 'யார்ட்டல பேசிக்கிட்டு இருக்கே...' என்று யாரோ வர, சுதாரித்த குட்டையன், ஒரு ஜம்பு ஜம்பி, வெளியே ஓடிப்போய் விட்டான்.குழந்தை, பெரீபா என்று கொல்லைப்புறம் கை காண்பித்ததை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. குட்டையன் கொல்லையில் போய்த் துாங்கி காலையில், 5:௦௦ மணிக்கே சகலை வீட்டு வாசலுக்கு நேர் எதிரே வந்து உட்கார்ந்து அழ ஆரம்பிக்க, கூட்டம் சேர்ந்தது. அண்டை அயலுாரில் குட்டையனின் அலப்பரைகள் மிகப் பிரசித்தம்.எனவே, காலங்கார்த்தால நமக்கு எதுக்கு என ஒதுங்க, கேட்பார் நாதியில்லாமல் அமர்ந்திருந்த அவனை, ௭:௦௦ மணிக்கு வெளியே வந்த மைத்துனி கவனித்து உள்ளே அழைக்க, அதுவரை தான் அடக்கி வைத்திருந்ததை வாசிக்க ஆரம்பித்தான்.வீராவேசமாக, 'உன் புருஷன் என்ன பெரிய சண்டியரா...' என்ற ரீதியில் ஆரம்பித்து, தன் மனைவியை அடித்தது; இரவில் சுவர் ஏறிக் குதித்து, சகலையைக் கொல்ல திட்டமிட்டது. நிறைமாத கர்ப்பிணியான அவள் வெளியே வந்த போது ஒளிந்து கொண்டது; பின், பிள்ளையைப் பார்த்து, தன் பிள்ளை நினைவு வந்தது; அதன் பின் தன் முடிவை மாற்றிக் கொண்டது எல்லாம் கூறி முடிக்க ஒரே சலசலப்பு.'மொதல்ல சகலையைக் கூப்புடு... நான் மன்னிப்பு கேக்கணும். இந்தப் பச்சப் புள்ளயால தான் அவன் தப்பிச்சான். நான் கொலை பண்ணீருப்பேன் அவனை. அவன்ட்ட சொல்லிட்டுப் போயிருதேன், அவனைக் கூப்புடு' என்று தரையில் குத்தி வைத்திருந்த கத்தியின் மேல் மண்ணை எடுத்து துாவினான். அவள் மாமனார் அரண்டு போய். 'சரி சரி ஆம்பளயாளு இல்லாத நேரத்துல எதுவும் வேணாம். நீ போய்ட்டு நாளக்கி வா' என்றார்.'என்னது? நான் கொலை செய்ய வந்த சகலை வீட்டிலேயே இல்லையா? 'அவரு துாத்தோடிக்கு (துாத்துக்குடி) ஒரு துட்டிக்கி போயிருக்காரு. முந்தாநாள் போச்சு இன்னிக்கு இப்ப வந்துருவேன்னாஹ' என்றாள் தங்கை ஷீணமாக. அப்போது ஒரு, டி.வி.எஸ்., 50 வர, பின்னால் இருந்தது சகலை!அவர் கலவரமாக பார்க்க ஊர்க்காரர்கள் எல்லாம் சொல்லி, புரிய வைக்க அது வரை சாந்தமாக இருந்தவன் மீண்டும் முதலில் இருந்து, 'நீ என்ன பெரிய சண்டியரா... மனைவியை அடித்தது, கத்தி எடுத்தது, சுவர் ஏறிக் குதித்தது, கர்ப்பிணி ஒதுங்க வந்த போது மறைந்து கொண்டது முதல் தான் மனம் மாறி பச்சத்தண்ணீ கூட குடிக்காமல் உன்னிடம் சொல்லி விட்டுப் போக, காலையில் இருந்து அமர்ந்திருப்பது எல்லாம் கூற, அதற்குள் குட்டையனின் மனைவி கிழவன் எல்லாரும் சேர்ந்து ஒரே அழுகை.'ஏல நீ செத்துருப்பலே... நீ தப்பிச்சது உம் புள்ளையாலலே' என்று மீண்டும் மீண்டும் ஆரம்பிக்க, சகலை அவரைப் புரிந்து கொண்டு, கீழே இறங்கி வந்து கட்டித்தழுவி சமாதானம் செய்ய, எல்லாம் சுபம்.இப்படியாக கொலை வெறியோடு வரும், ஒரு முரடனையும் மனம் மாறச் செய்யும் சக்தி புத்திர சோகத்துக்கு உண்டு. புத்திர சோகம், எல்லாத் துன்பங்களுக்கும் மேலானது; நாம் சாகும் வரை கூடவே இருக்கும்.


பி. உமா

ananz59@yahoo.co.in

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X