| கிருமி நாசினி இயற்கை சாயம்: ஆடைகளில் பயன்படுத்த திட்டம் Dinamalar
கிருமி நாசினி இயற்கை சாயம்: ஆடைகளில் பயன்படுத்த திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 டிச
2019
05:48

திருப்பூர்:ஆடைகளில் பயன்படுத்த, கிருமிநாசினி இயற்கை சாயங்களை உருவாக்க, திருப்பூர் இன்குபேஷன் மையம் திட்டமிட்டுள்ளது.கம்பளி நுாலில் ஷூ, வாழை நாரில் ஆயத்த ஆடை, உப்பு இல்லா சாயமேற்றும் தொழில்நுட்பம் என, ஆடை தயாரிப்பில் பல்வேறுவகை தொழில்நுட்பங்களை, திருப்பூரில் செயல்பட்டு வரும், இன்குபேஷன் மையம் உருவாக்கியுள்ளது; அடுத்தகட்டமாக, ரசாயனத்துக்கு பதில், வேம்பு, துளசி, ஆவாரம்பூ, மா போன்றவற்றில் இருந்து, கிருமி நாசினி சாயங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.


மையத்தின், நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:கிருமி தொற்றா தன்மை அளிப்பதற்காக, ஆடைகளில், தற்போது, சில்வர் நைட்ரேட் போன்றவற்றை கொண்டு மேற்பூச்சு அளிக்கப்படுகிறது. மூலிகை தாவரங்களில் இருந்து சாறு எடுத்து, இயற்கை கிருமி நாசினி சாயம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.இதற்கான, மூலிகை தாவரங்களை வளர்ப்பதற்கு, முதல்கட்டமாக, இன்குபேஷன் மையம், 'நபார்டு' வங்கி இணைந்து, உடுமலை பகுதி விவசாயிகளின் இருப்பிடம் சென்று பேச்சு நடத்தப்பட்டுள்ளது; அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த, விவசாயிகள், திருப்பூர் வருகின்றனர்.விவசாயிகள், இத்தகைய விவசாயத்தில் ஈடுபட்டால், இயற்கை சாயம் தயாரிப்பதற்கான இலை, மர பட்டை, காய் போன்ற மூலப்பொருள் தடையின்றி கிடைக்கும்; விவசாயிகளுக்கும் சிறந்த வருவாய் கிடைக்கும்.


இவ்வகை இயற்கை சாயம் தயாரிப்பு, ஆடை உற்பத்தி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சாதாரண ஆடைகளைவிட, இயற்கை சாயமேற்றப்பட்ட கிருமி நாசினி ஆடைகளுக்கு சர்வதேச சந்தையில் அதிகம் மதிப்பு உள்ளது. எனவே, இயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்டு, ஏராளமான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, பெரியசாமி கூறினார்.சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதிஅணிபவருக்கு ஊறு விளைவிக்காதவகையில், ஆடைகள் இருக்க வேண்டும்.


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அதிக நச்சுத்தன்மையுள்ள ஏராளமான ரசாயனங்களை தடை செய்துள்ளன. ஆடைகளுக்கு இத்தகைய ரசாயனம் கலந்த சாயமேற்றவும் அனுமதிப்பதில்லை. சமீபகாலமாக, உலகளாவிய மக்கள் மத்தியில், இயற்கை சாயமேற்றப்பட்ட ஆடை ரகங்களுக்கு மவுசு அதிகரித்துவருகிறது. இயற்கை நுாலிழையில் தயாரிக்கும் ஆடைகளுக்கு, இயற்கை பொருட்களால் சாயமேற்றும்போது, அணிபவர் உடலுக்கும் தீங்கு ஏற்படாது; நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்;சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X