அரியலூர்: நாளிதழ் மற்றும், 'டிவி'யில், தன் பெயர் வர வேண்டும் என்பவதற்காக, அரசு பஸ்சிற்கு தீ வைத்த வாலிபரை, திருமானூர் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, லால்குடியில் இருந்து அரியலூர், திருமழபாடிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ், கடைசி நடையாக, நேற்று முன்தினம் இரவு, திருமழபாடிக்கு சென்று, அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டது. ஓட்டுனர் செந்தில்குமார், நடத்துனர் கிருஷ்ணகுமார் ஆகியோர், கால்நடை மருத்துவமனையில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு, 12:30 மணியளவில், பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த, அரியலூர் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. திருமானூர் போலீசார் விசாரணையில், திருமழப்பாடி மார்க்கெட் தெருவைச் சேர்ந்த, தனியார் பள்ளி பஸ் ஓட்டுனர், சதாசிவம், 48, என்பவர் சிக்கினார். அவர், 'என் பெயர், நாளிதழ் மற்றும், 'டிவி'யில் செய்தியாக வர வேண்டும் என்பதற்காக, பஸ்சிற்கு தீ வைத்தேன்' என, போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார், அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.