கடலுார்: கடலுார் பஸ் நிலைய கடைகளுக்கு வாடகை பாக்கி வசூலிக்க சென்ற அதிகாரிகள், ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் விரக்தி அடைந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கடலுார் நகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி மற்றும் வாடகை மூலம் வருவாய் கிடைத்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புக்கான பதவி காலம் முடிந்த பின்னர் சரியான நடவடிக்கை இல்லாததால் நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் கணிசமாக குறைந்தது.இதன் காரணமாக நகராட்சி சார்பில் தெரு விளக்கு மின்கட்டணம் போன்றவை செலுத்த முடியாமல் நகராட்சி நிர்வாகம் முடங்கியது. ஊழியர்களுக்கு சம்பளம் போட போதிய நிதி இல்லாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. வளர்ச்சிப்பணிகள் குறித்து நினைத்துப்பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் நகராட்சிக்கு வருவாயை திரட்ட அதிகாரிகள் அதிரடியாக களத்தில் இறங்கினர். முதற்கட்டமாக வாடகை பாக்கியை வசூலிப்பது என முடிவு செய்தனர்.கடலுார் பஸ் நிலையத்தில் மட்டும் 120 கடைகள் உள்ளன. இவற்றில் 112 கடைகளில் இருந்து மட்டும் 10 கோடி ரூபாய்க்கு வாடகை பாக்கி உள்ளது. இந்த கடைகளை ஆளுங்கட்சியினர் சிலர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பினாமி பெயரில் கடையை எடுத்து அதை கீழ் வாடகைக்கு சிறிய கடைகளுக்கு பிரித்து விட்டு பணம் வசூலித்து வருகின்றனர்.
அவ்வாறு வசூலிக்கும் பணத்தை கூட நகராட்சிக்கு செலுத்துவதில்லை. இதனால் கமிஷனர் ராமமூர்த்தி சக அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். அதில், வாடகை பாக்கி உள்ள கடைகளை மூடி சீல் வைப்பதென முடிவு செய்யப்பட்டது.அதன்படி கமிஷனர் ராமமூர்த்தியின் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் அரவிந்த ஜோதி தலைமையில் மேலாளர் பழனி, நகரமைப்பு அலுவலர் முரளி, சீனிவாசன், அரிக்குமார், ஜெயப்பிரகாஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் நேற்று வாடகை பாக்கி வசூலிக்க சென்றனர்.நகராட்சி அலுவர்கள், ஊழியர்கள் திரண்டு வருவதை பார்த்தவுடன் பெரும்பாலான கடைக்காரர்கள் கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். சிலர் வாடகை செலுத்த காலக்கெடு கேட்டனர்.இந்நிலையில் அதிகாரத்தில் உள்ள ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் கடையை சீல் வைக்கும் முடிவு கைவிடப்பட்டது.
அதேசமயத்தில் ஒரு வாரத்திற்குள் வாடகை பாக்கியை செலுத்தி விட வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் அவகாசம் கொடுத்துள்ளனர்.ஒரு வாரத்திற்குள் வாடகை பாக்கி செலுத்தவில்லையென்றால் மீண்டும் கடையை சீல் வைப்பது என முடிவு செய்த, நகராட்சி அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.