| கோவிலை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு: அளவீடு பணி மேற்கொண்டதால் அதிர்ச்சி Dinamalar
கோவிலை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு: அளவீடு பணி மேற்கொண்டதால் அதிர்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
11:42

கோவை : கோவை நஞ்சுண்டாபுரத்திலுள்ள புராதன கோவிலை இடிக்க, ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



கோவை கரும்புக்கடை, சாரமேடு வழியாக, நஞ்சுண்டாபுரம் அடைய இணைப்பு சாலை ஏற்படுத்தவும், சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு, குடிசை மாற்று வாரியத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டவும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ள, கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதற்கு, சுமார், 20 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக, மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, நஞ்சுண்டாபுரத்திலுள்ள, கரிவரதராஜபெருமாள், பத்ரகாளியம்மன், முனியப்பன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.




இதற்கு முன், நீண்டகால குத்தகை அடிப்படையில் நிலத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கோரி, அறநிலையத்துறைக்கு கடிதம் அனுப்பியது; இதற்கு, இந்து சமய அறநிலையத்துறை இசைவு தெரிவித்துள்ளது.இந்நிலையில், நஞ்சுண்டாபுரத்தின் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியிலுள்ள பத்ரகாளியம்மன், கரிவரதராஜப் பெருமாள், முனியப்பன் கோவிலை இடித்து அப்புறப்படுத்தப்போவதாக, மாநகராட்சி அதிகாரிகள் நஞ்சுண்டாபுரம் ஊர் பொதுமக்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது; நேற்று முன்தினம் அங்கு அளவீடு பணியையும் மேற்கொண்டனர்.




இதற்கு, நஞ்சுண்டாபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ராஜமாணிக்கத்திடம் கேட்டபோது, ''நீண்டகால குத்தகை அடிப்படையில், கோவில் நிலங்களை, அரசு விதிமுறைகளின் படி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளோமே தவிர, நிர்வாக ரீதியான பணிகள் ஏதும் நிறைவடையவில்லை. இச்சூழலில், கோவிலை இடிப்பது குறித்து, மாநகராட்சி, எங்களிடம் எந்த அனுமதியும் கோரவில்லை. கோவிலை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை,'' என்றார்.



முனியப்பன் கோவில் நிர்வாகி ராமநாதன் கூறுகையில், ''காலங்காலமாக, நஞ்சுண்டாபுரம் மக்களால் வழிபாடு செய்யப்படும் கோவில் அப்புறப்படுத்துவதை, பக்தர்களும், இவ்வூர் பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நீதிமன்றத்தை நாடுவோம்; தமிழக அரசிடம், எங்கள் உரிமையை நிலை நாட்டுவோம்,'' என்றார்.



பத்ரகாளியம்மன் கோவில் நிர்வாகி விஜயபாலாஜி கூறுகையில், ''புராதன கோவிலை இடிப்பதை தவிர்த்து, மாற்று வழியை அதிகாரிகள் யோசிக்கலாம்,'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X