அரியலூர்: அரியலூர் அருகே, பள்ளி மாணவியர் சிலர், பீர் குடித்து கும்மாளம் போடும் வீடியோ, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரியலூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த, 15 - 16 வயது மதிக்கத்தக்க மாணவியர் மூவர், காட்டுப் பகுதியில், பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பையுடன் அமர்ந்து, 'பீர்' குடிக்கும் வீடியோ, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மொத்தம், இரண்டு நிமிடம், 26 விநாடிகள் ஓடும் வீடியோ பதிவில், பள்ளிக்கு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு, 5 மாணவியர் செல்கின்றனர். அதில், மூன்று மாணவியர் மட்டும் பீர் அருந்துகின்றனர். மாணவியர் பீர் குடிக்க ஆரம்பித்தவுடன், ஒரு மாணவி மட்டும், அங்கிருந்து சென்று விடுகிறார். மாணவியர் மூவரும், 'சியர்ஸ்' கூறி, பீர் குடிக்கின்றனர். மூன்று மாணவியரின் பெயரையும் மற்றொரு மாணவி கூறுகிறார். இந்த சம்பவத்தை, சக மாணவியை வீடியோ எடுக்கச் சொல்லி, அந்த மாணவியர் குடித்து கும்மாளமிடுகின்றனர். இந்த சம்பவம், பொங்கல் பண்டிகையை ஒட்டி நடந்தது எனவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவால், மாணவியரின், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மூன்று மாணவியரும், வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.