புதர் மண்டிய வரத்துக்கால்வாய்
சாத்துார் அருகே பெரிய கொல்லபட்டி கண்மாய் வரத்துக்கால்வாயில் சீமை கருவேல முள் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. மேலும் குப்பையை பொதுமக்கள் வீசுவதால்
சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் குப்பை கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனை முன்பு கழிவுநீர்
சிவகாசி அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஓடை துார்வாரப்படாமல் முட்புதர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதன் துர்நாற்றம், நோயாளிகள் கொசுக்கடியால் பாதிக்கின்றனர். ஓடையினை துார்வார நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்
சாத்துார் ரயில்வே பீடர் ரோட்டில் எத்தல்ஹார்வி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள ஓடைப்பாலம் தடுப்புச் சுவர் இன்றி காணப்படுகிறது. தெற்கில் இருந்து வடக்காக செல்லும்
வாகனங்கள் நிலைதடுமாறி விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவரின் உயரத்தை
அதிகப்படுத்தி விபத்து ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடைப்பட்ட கழிவுநீர் வாறுகால்
ஸ்ரீவில்லிபுத்துார் பைபாஸ் ரோடு முருகன் கோயில் முன்புள்ள கழிவுநீர் வாறுகாலில் கழிவுகள் அடைப்பட்டு சுகாதாரக்கேடு மற்றும் கொசுத்தொல்லை ஏற்பட்டு வருகிறது. இதன் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதைந்த பேவர்பிளாக்
ஸ்ரீவில்லிபுத்துார் கல்லறை ரோட்டில் பேவர்பிளாக் கற்கள் பெயர்ந்து, வாகனஓட்டிகளை
விபத்திற்குள்ளாக்கி வருகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் மாணவர்கள்
பாதிக்கின்றனர். ரோட்டை விரைந்து சீரமைக்கவேண்டும்.
பெயர்ந்த சிமென்ட் ரோடு
காரியாபட்டி அரசு மருத்துவமனையில் போடப்பட்ட சிமென்ட் ரோடு பெயர்ந்து இருப்பதால் ஸ்டெச்சரில் நோயாளிகளை வைத்து தள்ள முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திறந்த நிலையில் சமுதாய கிணறு
மல்லாங்கிணறு அயன்ரெட்டியா பட்டியில் திறந்த நிலையில் உள்ள சமுதாய கிணறால் விபத்து அபாயம் இருப்பதாக கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர். இதை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.