அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே நரிக்குறவர் காலனி மக்கள் குடிநீருக்காக பல மணி நேரம் காத்திருந்தும் கிடைக்காமலும் மற்ற புழக்கங்களுக்கு தண்ணீர் தேடி அலையும் நிலையில் உள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே குப்பை கிடங்கு செல்லும் ரோட்டில் நரிக்குறவர் காலனியும், அருகில் அம்பேத்கர் நகரும் உள்ளது. இங்கு 5 க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதி மக்களின் தலையாய பிரச்னையே தண்ணீர் தான். சுக்கிலநத்தம் ஊராட்சி மூலம் வழங்கப்படும் போர்வெல் தண்ணீர் அதிக உப்புதன்மையுடன் உள்ளதால் அதை பயன்படுத்த முடியவில்லை என்கின்றனர் இப்பகுதி பெண்கள்.
இதோடு புழக்கத்திற்கு தண்ணீர் தேடி குடங்களுடன் அலைகின்றனர். தாமிரபரணி குடிநீர் பொது குழாய் ஒன்று அமைத்துள்ளனர். இதில் எப்போது தண்ணீர் வரும் என தெரியாது. இதனால் குடங்களுடன் குழாய் அருகில் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. வரும் குடிநீரும் 1 மணி நேரத்தில் நின்று விடும். முழுமையாக யாரும் குடிநீர் பிடிக்க முடியவில்லை. வீட்டிற்கு ஒரு மினி வண்டி தயார் செய்து குடங்களை வைத்து தண்ணீரை தேடி அலைகின்றனர். காலனியிலிருந்து 1 கிலோ மீட்டர் துாரம் உள்ள நகராட்சி பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வர வேண்டியுள்ளதாக பெண்கள் கூறுகின்றனர்.
மெயின் ரோட்டிலிருந்து காலனிக்கு வர முறையான பாதை இல்லை. தனியார் 'பிளாட்' களில் பாதை அமைத்து சென்று வருகின்றனர். தெருக்களில் வாறுகால்கள் இல்லை. ரோடும் இல்லை. அரசு வீடுகள் கட்டி கொடுக்க இடம் ஒதுக்கியும் இதுவரை வீடு கட்டி தரவில்லை. ஒதுக்கப்பட்ட இடத்தில் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை மறைத்து வசிக்கின்றனர்.
இன்னும் பாதிபேர் அந்த இடத்தை விட்டே சென்று விட்டனர். தெரு விளக்கு வசதி, குப்பை தொட்டி, ரோடு வசதி என எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமல் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். இங்கு கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம் பாதி பணிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. காலனி அருகிலே குப்பை கிடங்கு இருப்பதால் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. கொசு மருந்து அடிக்க வருவதே இல்லை.
காலனிக்கு நவீன சுகாதார வளாகம், சமுதாய கூடம், பெண்களுக்கு கழிப்பறை போன்றவற்றை கட்டி தர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தண்ணீருக்காக தினம் தவிப்பு
எங்கள் காலனியில் குடிநீருக்காக தினமும் அலைய வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நாங்களாகவே வண்டி தயார் செய்து குடங்களுடன் தண்ணீர் தேடி அலைகிறோம். ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர்அதிக உப்பு தன்மையாக உள்ளது. தாமிரபரணி குடிநீர் எப்போது வரும் என்று தெரியாது. தண்ணீருக்காக நாங்கள் தினமும் போராடுகிறோம்.
- ராமு, குடும்பத்தலைவி.
சுகாதார வளாகம் வேண்டும்
நரிக்குறவர் காலனி, அம்பேத்கர் நகர் பகுதிகளில் நவீன சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். காலி இடங்களை திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்த வேண்டியுள்ளது. அரசு எங்கள் பகுதி பெண்களுக்கென்று தனியாக கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- மதிலட்சுமி, குடும்பத்தலைவி.
பாதை வேண்டும்
எங்கள் பகுதிக்கு மெயின் ரோட்டிலிருந்து செல்ல முறையான பாதை இல்லை. தனியார் பிளாட்டுகளில் பாதைகள் அமைத்து சென்று வருகிறோம். பிளாட்டுகாரர்கள் அனுமதிக்க மறுத்தால் நாங்கள் பாதையின்றி சிரமப்பட வேண்டி வரும். அரசு முறையான பாதை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- அஞ்சலி தேவி, குடும்பத்தலைவி.
அடிப்படை வசதிகள் இல்லை
எந்தவித அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.எங்களை அரசு புறக்கணிப்பு செய்கிறது. ரோடு, தண்ணீர், தெருவிளக்கு, வாறுகால் வசதி என எதுவும் செய்யப்படவில்லை. நாங்கள் இங்கு வந்து செல்லும் அதிகாரகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் பார்ப்பதோடு சரி. அதன் பின் மறந்து விடுகின்றனர்.
- கோமதி, குடும்பத்தலைவி.