ராஜபாளையம்:கண்மாய்களின் மீன்பாசி ஏலத்தை ரத்து செய்ய ஒன்றிய கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் வலியுறுத்தினார்.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சிங்கராஜ்(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சிவக்குமார் வரவேற்றார். துணைத்தலைவர் துரை கற்பகராஜ் முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் ஆப்சென்ட் ஆன நிலையில் பி.டி.ஓ., (ஊராட்சி)சத்தியவதி, மேலாளர் பாண்டீஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்கள் விவாதம்---
கந்தகிருஷ்ணகுமார் (அ.தி.மு.க., ) :ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டட அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், பரிந்துரைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தலைவர்: நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும்.
நவமணி (தி.மு.க.,): உள்ளாட்சி தேர்தல் பின்பு ஒன்றியத்திற்குட்பட்ட 8 கண்மாய்களில் மீன்பாசி ஏலம் விடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.
தலைவர்: மீன் பாசி ஏலம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்துலட்சுமி (தி.மு.க.,): சமுசிகாபுரம் பகுதிக்குட்பட்ட மில் கிருஷ்ணாபுரம் மெயின் ரோடு பணிகள் கடந்த நான்கு மாதங்களாக கிடப்பில் உள்ளது.
சிவகுமார் (பி.டி.ஓ.,): இந்த ரோடு தற்போது நகராட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தடையில்லா சான்று பெற்றவுடன் மீதிப்பணிகளுக்கான வேலைகள் துவங்கி விடும்.
தலைவர்: கவுன்சிலர்கள் அனைவரும் கட்சிப்பாகுபாடின்றி தங்கள் பகுதி பிரச்னை குறித்து எப்போது வேண்டுமானாலும் முறையிடலாம். இவ்வாறு விவாதம் நடந்தது.