கோவை:'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோவையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம், ஐ.டி., பார்க் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 'வரும், 22ல் (ஞாயிற்றுக்கிழமை), சுய கட்டுப்பாட்டுடன் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசும், வணிக நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, கோவையில் நடத்த திட்டமிட்டிருந்த பல விழாக்கள், கண்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. பல நிறுவனத்தினர், தாமாக முன்வந்து, நிறுவனங்களை மூடி வருகின்றனர்.'ஷாப்பிங் மால்'கள், கோவில்கள், சந்தைகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. சிறு சிறு ஓட்டல்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் போன்றவை இயங்கி வருகின்றன.இ-சேவை மையங்கள் மூடல்கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்துக்கு, ஆதார், ஜாதி சான்று, இருப்பிடம், ஆண் வாரிசு இன்மை உள்ளிட்ட சான்றிதழ்கள் விண்ணப்பிக்க, ஏராளமானோர் தினமும் வருகின்றனர்.
இதே நிலை, மாவட்டத்தில் செயல்படும், 231 மையங்களிலும் இருப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், வரும், 31ம் தேதி வரை, இ-சேவை மையங்களை மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.செயல்படும் ஐ.டி., பார்க்அதேநேரம், கோவை டைடல் பார்க் மற்றும் கீரணத்தத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப மையங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. எவ்வித பிரச்னையும் வராது என்ற சூழலில், அலட்சியத்துடன் செயல்படுகின்றன.
பிற நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூடப்பட்டு, 'வீட்டில் இருந்து வேலை' என்கிற நடைமுறை பின்பற்றப்படுகிறது. கோவையில் சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமே இம்முடிவுக்கு வந்துள்ளன; இருப்பினும் செயல்படுத்தாமல் உள்ளன.உஷாராக நிறுவனங்கள்குறைந்த பட்சம், 5 நபர்களுடன் இயங்கும் தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
முக கவசம் அணிதல், கை கழுவுதல், கை கழுவும் முறைகள், இருவருக்குமான இடைவெளிகள் போன்றவை பின்பற்றப்படுகின்றன.பயணிகள் குறைவுகோவை நகரில் நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. டவுன் பஸ், வெளியூர் பஸ்களில், 10க்கும் குறைவானவர்களே பயணித்தனர். பஸ்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளன. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கையும் மிகவும் குறைந்திருக்கிறது.தற்போது, 'கொரோனா' விழிப்புணர்வு அனைத்து தரப்பினரிடமும் சென்றடைந்துள்ளது. மாநகராட்சி சார்பிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஈடுபட்டுள்ளனர். இது, கோவை நகரை பாதுகாக்கும் என்கிற நம்பிக்கை எழுந்துள்ளது.
விமான சேவை ரத்து
கோவை விமான நிலையத்தில், 24 மணி நேரமும் மருத்துவக்குழுவினர் பணிபுரிகின்றனர். இவர்கள், தீவிர பரிசோதனை செய்த பின்னரே, பயணிகள் வெளியே செல்ல அனுமதிக்கின்றனர். 'கொரோனா' வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.
பல்வேறு விமான நிறுவனங்கள், விமான சேவையை ரத்து செய்து வருகின்றன. கோவையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானம், 23, 30ம் தேதிகளில், தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளது. இதேபோல், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும், 21, 24, 26, 27, 30 ஆகிய தேதிகளில் சேவையை நிறுத்தியுள்ளது. இதேபோல், பல்வேறு உள்நாட்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.