| போலி கபசுர குடிநீர் சூரண பாக்கெட் விற்பனை:கண்டு கொள்ளாத சித்த மருத்துவத்துறை Dinamalar
போலி கபசுர குடிநீர் சூரண பாக்கெட் விற்பனை:கண்டு கொள்ளாத சித்த மருத்துவத்துறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஏப்
2020
02:46

சிவகங்கை:சித்த மருத்துவமனைகளில் கபசுர குடிநீர் பொடி போதிய அளவு இருப்பு இல்லாததால் போலி பொடி பாக்கெட் விற்பனை அதிகரித்துள்ளன.



மாவட்ட சித்த மருத்துவ துறையினர் வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.டில்லி மாநாடு சென்று வந்தவர்கள் உட்பட மாவட்ட அளவில் 48 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதில் 5 பேருக்கு தொற்று உறுதியானதால், அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



இது தவிர வீடுகளில் ஆயிரத்து 500 பேர் மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ்' நோயை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில், ஆயுஷ் மருத்துவம் சார்பில் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் சாப்பிடலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.



அனைவரும் கபசுர குடிநீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், மக்கள் கபசுர குடிநீர் பொடியை தேடி அலைகின்றனர். மாவட்ட சித்த மருத்துவமனையிலும் போதிய அளவில் பொடி இருப்பு இல்லை.பெரும்பாலான சித்த மருத்துவமனையில் கபசுர குடிநீர் பொடி இல்லை என திருப்பி அனுப்புகின்றனர்.



இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் போலியாக பொடி தயாரித்து, கபசுர குடிநீர்' பொடி பாக்கெட்டை அதிக பட்சமாக (100 கிராம்) 150 ல் இருந்து 200 ரூபாய் வரை விற்கின்றனர். மக்களும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் போலியான கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டை வாங்கி குடிக்கின்றனர்.



சிலர் மூலிகை மருந்து கலந்து தயாரிக்கப்பட்ட நீரை கபசுர குடிநீர் என தினசரி சந்தை, தெருக்களில், மளிகை கடைகளுக்கு வருவோருக்கு வழங்கி வருகின்றனர். இதை குடிப்பதால், சர்க்கரை நோயாளிகள், இருதய கோளாறு, ரத்தஅழுத்த பிரச்னை உள்ளவர்கள் பாதிக்கப் படுவர்.இதை தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டிய மாவட்ட சித்த மருத்துவத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உண்மையான கபசுர குடிநீர் எது என கண்டறிந்து பருக முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.



போலி பவுடர் விற்றால் சிறை:





மாவட்ட மருத்துவ அலுவலர் (ஆயுஷ்) எம்.பிரபாகரன் கூறியதாவது: நிலவேம்பு கஷாயம் 9 மூலிகை, கபசுர குடிநீர் சூரணம் 15 வகை மூலிகையால் தயாரிக்கப்படுகிறது. உரிய அரசு அனுமதி, பதிவு எண்ணுடன் தயாரித்து விற்கும் அங்கீகரிக்கப்பட்ட பவுடர்களை தான் வாங்க வேண்டும். ஆனால் தரம் குறைந்த கபசுர குடிநீர் சூரண பவுடரை விற்பவர்களுக்கு மருந்து மற்றும் அழகு சாதன பொருள் விற்பனை சட்டம் 1940ன் படி 5 லட்சம் அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மாவட்ட சித்த மருத்துவர்கள் அனுமதி பெற்ற பின்னரே, மக்களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வினியோகிக்க வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X