அரியலூர்: அரியலூர் மாவட்ட போலீசார், நாளொன்றுக்கு, 250 பேருக்கு என, 12,500 உணவு பொட்டலங்கள் ஆதரவற்றோருக்கு வழங்கி மனிதநேயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஊரடங்கு அமலில் உள்ளதால், அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என பலர் உணவுக்கு சிரமப்பட்டனர். இதையறிந்த அரியலூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசன், அந்தந்த ஸ்டேஷன் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் உணவின்றி தவிக்கும் நபர்கள் குறித்து, இன்ஸ்பெக்டர்கள் மூலம் கணக்கெடுக்க உத்தரவிட்டார். அதன்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், நாளொன்றுக்கு சராசரியாக, 250 பேர் உணவின்றி சிரமப்படுவதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தொண்டு நிறுவனங்கள், சாய்பாபா கோவில் ஆகியவற்றின் மூலம் கலவை சாதம் தயார் செய்யப்பட்டு, போலீஸ் ரோந்து வாகனம் மூலம் தினமும் காலை, மாலை இருவேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மார்ச், 25ம் தேதி முதல், 250 பேருக்கு, நாளொன்றுக்கு இரண்டு பொட்டலங்கள் வீதம், இதுவரை, 12,500 பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாள்தோறும் உணவு பொட்டலங்கள் வழங்கி, அரியலூர் மாவட்ட போலீசார் தங்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். தவிர, போலீஸ் துறை மூலம், அந்தந்த ஸ்டேஷன் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.