| 60 சதவீதம் நிறைவு! திருமூர்த்தி அணையிலிருந்து புதிய குடிநீர் திட்ட பணி Dinamalar
60 சதவீதம் நிறைவு! திருமூர்த்தி அணையிலிருந்து புதிய குடிநீர் திட்ட பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:44

உடுமலை:திருமூர்த்தி அணையிலிருந்து, உடுமலை, மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் என, 381 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும், புதிய கூட்டு குடிநீர் திட்ட பணியில், கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.உடுமலை, திருமூர்த்தி அணை, தளி வாய்க்காலை ஆதாரமாகக்கொண்டு, உடுமலை, மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்கள், ஐந்து பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில், மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.பூலாங்கிணர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், 39 கிராமங்கள் மற்றும் தளி பேரூராட்சி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு, 3.1 எம்.எல்.டி., குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மடத்துக்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குமரலிங்கம், கணியூர், சங்கராமநல்லுார், மடத்துக்குளம் பேரூராட்சிகள் மற்றும், 95 ஊரக குடியிருப்புகளுக்கு, 11.76 எம்.எல்.டி., குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கணக்கம்பாளையம் குடிநீர் திட்டத்தின் கீழ், 117 ஊரக குடியிருப்புகளுக்கு, 7.4 எம்.எல்.டி., குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததிற்கு பிறகு உருவான புதிய குடியிருப்புகள் மற்றும் விடுபட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வகையிலும், தற்போது பயன்பெற்று வரும், குடியிருப்புகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகை அடிப்படையில் இப்பகுதிகளுக்கும் கூடுதல் குடிநீர் வழங்கும் வகையில், 85.75 கோடி ரூபாய் செலவில், புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், திருமூர்த்திமலை தளி வாய்க்காலை ஆதாரமாக கொண்டு புதிய திட்ட பணிகள் நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு, 7.5 எம்.எல்.டி., குடிநீர் எடுத்து, சுத்திகரிக்கும் வகையில், நீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம், பிரதான குழாய்கள், ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்ட குழாய்கள் விஸ்தரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:உடுமலை, மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளுக்கு, மூன்று குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இக்குடிநீர் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, விடுபட்ட, 381 குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஊரடங்கு காரணமாக, பணிகள் நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.பணியை திட்ட காலத்திற்குள் முடிக்கும் வகையில், நீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம், குழாய் பதிக்கும் பணி என, அதிக தொழிலாளர்களை கொண்ட எட்டு குழுக்கள் அமைத்து பகுதி வாரியாக பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ஆறு மாத காலத்திற்குள் பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X