| குடிமராமத்து பணிகளை கண்காணிக்க சிறப்பு குழு: திட்ட நோக்கம் நிறைவேற வலியுறுத்தல் Dinamalar
குடிமராமத்து பணிகளை கண்காணிக்க சிறப்பு குழு: திட்ட நோக்கம் நிறைவேற வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
01:44

உடுமலை:குடிமராமத்து திட்ட பணிகளின் தரம் குறித்து, ஆய்வு செய்ய, விவசாயிகளை உள்ளடக்கிய, கண்காணிப்பு குழு அமைக்க, வலியுறுத்தப்பட்டுள்ளது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், உடுமலை தாலுகா பகுதியில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில், கிளை மற்றும் பகிர்மான வாய்க்கால்களில், பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில், குடிமராமத்து திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பகுதியாக புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது.


அதில், கிளை மற்றும் பகிர்மான வாய்க்கால்களில், மோசமாக சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்படுகிறது. புதர்களை அகற்றுதல், ஷட்டர் பராமரிப்பு உட்பட பணிகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.கடந்தாண்டு, குடிமராமத்து திட்டத்தில், குளம் மற்றும் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில், விவசாயிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது.பணிகள் நிறைவு பெற்ற பிறகு, பெயரளவுக்கு, தகவல் பலகை வைக்கப்பட்டது. இதனால், பணிகளின் தரம் குறித்து, புகார் தெரிவிக்க வழியில்லை; திட்டப்பணிகளின் தன்மை குறித்து தெரியாமல், விவசாயிகள், அதிர்ச்சியடைந்தனர்.குறைந்தளவு துாரத்துக்கு, முட்புதர்களை அகற்ற, பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது உட்பட குறைபாடுகள் பணிகள் நிறைவு பெற்ற பிறகே தெரிந்தது.இந்நிலையில், நடப்பாண்டு, பி.ஏ.பி., பாசன திட்டம், திருமூர்த்தி கோட்டத்தின் கீழ், 45 பணிகளுக்காக, 4 கோடியே 47 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்துக்கு, அதிகளவு அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், அதன் பலன் முழுமையாக இருப்பதில்லை.


நிதி ஒதுக்கீடு உட்பட விபரங்கள் தெரியும் வகையில், பணிகளை துவக்கும் முன்பே, தகவல் பலகை வைக்க வேண்டும்.பாசன சபையினரோடு, விவசாயிகளையும், உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த பிறகே, பணிகளை மேற்கொள்பவர்களுக்கு தொகை வழங்க வேண்டும். இதனால், தரமற்ற பணிகள் மேற்கொள்வது தவிர்க்கப்பட்டு, பாசன திட்டங்கள் மேம்படுத்த, உதவியாக இருக்கும். இது குறித்து தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X