| நிறுத்தம் விழுப்புரத்தில் மொத்த காய்கறி கொள்முதல்...விலை உயர்வால் மக்கள் பாதிக்கும் அபாயம் Dinamalar
நிறுத்தம் விழுப்புரத்தில் மொத்த காய்கறி கொள்முதல்...விலை உயர்வால் மக்கள் பாதிக்கும் அபாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
22:52

விழுப்புரம்; மாற்று இடம் பிரச்னையில், விழுப்புரம் நகர மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர், நேற்று முதல் காய்கறி கொள்முதல் செய்வதை நிறுத்தினர்.



இதனால், நகரில் காய்கறி விலை உயரும் அபாய நிலையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில்சுமூக தீர்வு காண வேண்டும்.விழுப்புரம் எம்.ஜி.ரோட்டில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை ஆகியவை, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதை தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சிப் பள்ளி மைதானத்தில், உழவர் சந்தை காய்கறி கடைகளும், விழுப்புரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலைய வளாகத்தில் காய்கறி கடைகளும் தற்காலிகமாக செயல்பட்டது.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 1ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து துவங்கியது. இதனால், பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி கடைகளை காலி செய்யுமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், நகராட்சி பள்ளி மைதானத்தில், காய்கறி சில்லரை கடைகள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது.இதே நேரத்தில் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்ட மொத்த காய்கறி வியாபாரிகள், விழுப்புரம்-திருச்சி ரோட்டில், ஆவின் எதிர்புறத்தில் ஜானகிபுரம் பகுதியில், காய்கறி லாரி லோடுகளை இறக்கி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.ஜானகிபுரத்தில் திறந்த வெளியாக உள்ள அந்த இடத்தில், மொத்த காய்கறிகளை இறக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும், பாகர்ஷா வீதி அல்லது நகராட்சி பள்ளி மைதானத்தில் செயல்பட அனுமதிக்கக்கோரி மொத்த வியாபாரிகள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால், விழுப்புரம் நகர மொத்த காய்கறி வியாபாரிகள், மொத்த காய்கறி கொள்முதல் செய்வதை நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.விழுப்புரம் நகரத்திற்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 100 டன் காய்கறிகள் வருவது வழக்கம்.



இதேபோன்று, விழுப்புரம் சுற்றுப்புறங்களில் இருந்து 50 டன் அளவிற்கு விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது, காய்கறி கொள்முதல் நிறுத்தப்பட்டதால், விழுப்புரத்தில் காய்கறி விலை உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி காய்கறி விலை உயர்ந்தால், கொரோனாவால் வருமானமின்றி தவித்து வரும் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.எனவே, மொத்த காய்கறி மார்க்கெட் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X