| தாம்பரத்தில் சாலை பணியில் முறைகேடு; கொரோனா காலத்திலும், 'கமிஷன்' புகார் Dinamalar
தாம்பரத்தில் சாலை பணியில் முறைகேடு; கொரோனா காலத்திலும், 'கமிஷன்' புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2020
06:35

தாம்பரம் நகராட்சியில், பல இடங்களில் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ள நிலையில், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் புதுப்பித்து அமைப்பதாக, அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.



சென்னை அடுத்த தாம்பரம் நகராட்சியில், 1,300க்கும் மேற்பட்ட உட்புற சாலைகளும், 50க்கும் மேற்பட்ட பிரதான சாலைகளும் உள்ளன.மெத்தனம்இதில், 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும், பாதாள சாக்கடை திட்டப் பணிகளால், நகரின் பல தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.இவற்றை சீரமைப்பதில் மெத்தனம் காட்டி வரும் நகராட்சி அதிகாரிகள், நன்றாக உள்ள சாலைகள் மீது, புதிய சாலைகள் அமைத்து, கல்லா கட்டி வருவதாக புகார் எழுந்து உள்ளது.



இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:நகராட்சியின் உட்புற மற்றும் பஸ்கள் செல்லும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, ஓராண்டு வரை மட்டுமே ஒப்பந்ததாரர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.அதன் பின், நகராட்சி நிர்வாகம் தான், அதை பராமரிக்கும் என, நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனால், பல சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, மூன்றே மாதங்களில்சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விடுகின்றன.



இதற்கு உதாரணமாக, கிழக்கு தாம்பரம், பாரத மாதா தெரு மற்றும் ராஜேஸ்வரி நகருக்கு உட்பட்ட, வரலட்சுமி தெரு, மேற்கு தாம்பரம், முல்லை நகர் பிரதான சாலை ஆகியவற்றை கூறலாம்.மேலும், பல இடங்களில், உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, மிக மோசமாக சேதமடைந்த சாலைகளை முழுதுமாக பெயர்த்தெடுத்துவிட்டு, புதிய சாலைகள் அமைக்காமல், சேதமடைந்த சாலைகள் மீதே, 2 அடி உயரத்திற்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன.



சர்ச்சை



இது போலவே, கிழக்கு தாம்பரம், பாரதி நகர், ஜானகிராமன் தெரு உட்பட, 20க்கும் மேற்பட்ட உட்புற தெருக்களின் சாலைகள், 1.85 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது புதுப்பிக்கப்படுகின்றன.இதில், ஜானகி ராமன் தெருவில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு இணைப்பு வழங்காமல், நன்றாக உள்ள கான்கிரீட் சாலை மீது, வேண்டு மென்றே புதிய சாலை போடப்படுகிறது.இதற்காக, நகராட்சி பொறியியல் பிரிவில், அனைத்து அதிகாரிகளுக்கும், 'கவனிப்பு' செய்யப்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.




- நமது நிருபர் -

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X