சூலூர்:கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என, சின்னியம்பாளையம் பகுதி வியாபாரிகள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்தனர்.சின்னியம்பாளையம் பகுதியில், வைரஸ் தொற்று பரவலால், மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கடந்த, 17ம் தேதி முதல் கடைகள் அடைக்கப்பட்டன. ஊரின் வடக்குப் பகுதியில் உள்ள வீதிகளும் அடைக்கப்பட்டன.அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரும், கடைகளை திறக்க அனுமதி இல்லாமல் இருப்பதால், வியாபாரிகளும் விரக்தியில் உள்ளனர்.சின்னியம்பாளையத்துக்கு நேற்று வந்த எம்.எல்.ஏ., கந்தசாமியிடம் வியாபாரிகள் கூறுகையில், ' கடைகள் அடைக்கப்பட்டு, 15 நாட்களாகிறது. பொருட்கள் வீணாகி வருகிறது. கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர். மாவட்ட நிர்வாகத்துடன் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.