அன்னூர்:காட்டம்பட்டி ஊராட்சி, முதலிபாளையம் காலனியில், 35 வயது தனியார் பள்ளி ஆசிரியருக்கும், அவரது மனைவிக்கும், நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இருவரும் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அந்த வீதியில் வசிப்பவர்கள் உள்ளிட்ட, 78 பேருக்கு, நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.முதலிபாளையம் காலனி முழுவதும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. காலனியின் 2 வாசல்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. காலனியில் இருப்பவர்கள் வெளியே வரக்கூடாது. மற்றவர்கள் காலனிக்குள் செல்லக்கூடாது என, ஊராட்சி நிர்வாகம் தடை விதித்தது.தொற்று உறுதியான ஆசிரியர் கணேசபுரத்தில், ஒரு மருத்துவமனைக்கு இரண்டு முறை சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அந்த மருத்துவமனையும், அதை ஒட்டியுள்ள மருந்து கடையும் மூடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் கண்ணப்பன், ஊராட்சி தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர், காலனி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.