கோவை:கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் உட்பட, ஒரே நாளில், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 645 ஆக உயர்ந்தது.கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மயக்க மருந்தியல் துறை டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து, அரசு மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்தார். இதில், தொற்று உறுதி செய்யப்பட்டது.கோவை சுங்கம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் டாக்டர், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்தியல் துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கும் நேற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த காரமடையை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும், ஆர்.எஸ்.புரம், உக்கடம், நேருநகர், மேட்டூர், கணபதி, ஒத்தக்கால் மண்டபம், கஸ்துாரி நாயக்கன்பாளையம், ஆடிஸ் வீதி, காளப்பட்டி, ராமநாதபுரம், பீளமேடு, சேரன்மாநகர், ஒண்டிப்புதுார், இடிகரை, சரவணம்பட்டி, சாய்பாபாகாலனி, பெ.நா.பாளையம், சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என, மொத்தம், 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்கள், இ.எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 645 ஆக உயர்ந்தது. தற்போது, 391 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனை மூடல்கோவையில் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், பெ.நா.பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகள் 3 பேரும் அடங்குவர். இதனால், சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு, முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.