கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள ராக்கிபாளையத்தில் வசிப்பவர், பீகாரை சேர்ந்த கவுதமன், 28; தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஜோதிகுமாரி, 20.நிறைமாத கர்ப்பிணியான ஜோதிகுமாரிக்கு, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் செல்வம் உதவியுடன், ஆட்டோவில் துடியலுாரில் உள்ள, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர்.
அங்கு பணியில் இருந்த செவிலியர், 'இங்கு மருத்துவர் இல்லை' எனக்கூறி, கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறி, திருப்பி அனுப்பி விட்டார். பிரசவ வலி அதிகமானதால், துடியலுார் வட்டாரத்தில் இருந்த, தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றனர்.ஆனால், கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாமல், அனுமதிக்க முடியாது எனக் கூறி, அவர்களும் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால், நள்ளிரவில் கர்ப்பிணியும் அவரது கணவர் கவுதமனும், என்ன செய்வதென தெரியாமல் தவித்தனர்.பின்னர், அரசு ஆம்புலன்ஸ்சுக்கு போன் செய்து விட்டு, மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி பிரிவில், ஆட்டோவில் காத்திருந்தனர். வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வந்தபாடில்லை. அப்போது, ஜோதிகுமாரிக்கு வலி அதிகமாகி, பனிக்குடம் உடைந்து, ஆட்டோவிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது.பின், உடனடியாக அங்கிருந்து, சில மீட்டர் தொலைவில் உள்ள சாய் மருத்துவமனைக்கு, ஜோதிகுமாரி கொண்டு செல்லப்பட்டார். நிலைமையை பார்த்த சாய் மருத்துவமனை டாக்டர் சண்முகவடிவு மற்றும் செவிலியர் ஆகியோர், தாய்-சேயை மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனா தடுப்பு முழு உடையுடன் முதலுதவி செய்தனர்.நள்ளிரவில் நடந்த கொடுமைபொதுவாக பிரசவத்துக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, எந்த நேரத்தில், எந்த நிலையில் கர்ப்பிணிகள் வந்தாலும், அவர்களை அட்மிட் செய்து, முதலுதவி செய்ய வேண்டும்.
தொடர்ந்து சிகிச்சை செய்ய முடியாத நிலை இருந்தால், அது தொடர்பான குறிப்பு சீட்டுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல, உரிய அரசு ஆம்புலன்சை ஏற்பாடு செய்து, அனுப்ப வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால், இந்த விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணியை, நள்ளிரவில் தெருத் தெருவாக, அலைய விட்டுள்ள கொடுமையை என்னவென்பது!
இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ் கூறுகையில், '' அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணிகளை அனுமதிக்க வேண்டும் என, ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அனுமதிக்க மறுத்தது என் என்பது குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.கொரோனா பீதி இருந்தாலும், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை மறுக்கப்படுவது எந்த ஊர் சட்டம் என, மாவட்ட சுகாதாரத்துறைக்கே வெளிச்சம். இனியும் இது போன்ற ஒரு அவலம், எந்த பெண்ணுக்கும் நேராதவாறு, அரசு மருத்துவமனைகள் மட்டுமல்ல, தனியார் மருத்துவமனைகளுக்கும், மாவட்ட கலெக்டர் தக்க அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.யாரும் வரவில்லை; கூறுகிறார் டாக்டர்அன்றைய தினம் பணியில் இருந்த, துடியலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மகிமாவிடம் கேட்டதற்கு, ''துடியலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 12 மணி நேரத்துக்கு ஒரு டாக்டர் என, இரண்டு மருத்துவர்கள், 24 மணி நேரமும் பணியில் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, மூன்று பிரசவ கேஸ்களை கவனித்துள்ளேன். பிரசவத்துக்கு வரும் பெண்கள் குறித்து, இங்குள்ள பதிவேட்டில் கண்டிப்பாக பதிவு செய்வோம். நீங்கள் குறிப்பிடுவது போல யாரும் வரவில்லை. பிரசவித்த பெண், கொரோனா பரிசோதனைக்காக, இன்று துடியலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வருவதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து அவரிடம் விசாரிக்கிறோம்,'' என்றார்.