மேட்டுப்பாளையம்:கொரோனா பிரச்னையால், ஊட்டி உருளைக்கிழங்குக்கு, இந்தாண்டு ஏற்றுமதி, 'ஆர்டர்' கிடைக்கவில்லை.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், 90 உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. நீலகிரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு, தரம்பிரித்து இங்கு விற்பனை செய்யப்படுகிறது.ஊட்டி உருளைக்கிழங்கு, முதல் சீசன் அறுவடை கடந்த வாரம் துவங்கியது. வழக்கமாக, இலங்கைக்கு உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு ஏற்றுமதி ஆர்டர் ஏதும் கிடைக்கவில்லை.மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகள் வர்த்தக சபை செயலாளர் ரங்கசாமி கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரம் இரண்டு முறை, இலங்கைக்கு, 130 டன் ஊட்டி உருளைக்கிழங்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்தாண்டு கொரோனா பிரச்னையால், இதுவரை ஏற்றுமதி ஆர்டர் ஏதும் கிடைக்கவில்லை. தற்போது, 45 கிலோ கிழங்கு, 2,500 ரூபாயில் இருந்து, 2,900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது,'' என்றார்.