பெரம்பலுார்: 'கொரோனா ஊரடங்கால், வறுமையில் வாடிய, 105 வயது மூதாட்டிக்கு, தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், அரியலுார் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
அரியலுார் மாவட்டம், தஞ்சாவூரான்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள், 105. இவரது கணவர், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி, தனித்தனியே வசிக்கின்றனர். 35க்கும் மேற்பட்ட பேரப்பிள்ளைகள் உள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, இவரது மகன்களுக்கு வருமானம் இல்லாமல், தாயை யாரும் கவனிப்பதில்லை. அரசு புறம்போக்கு நிலத்தில், குடிசை வீட்டில் தனியாக வசிக்கும் காசியம்மாள், அன்றாட உணவுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறார். அக்கம் பக்கத்தில் உள்ளோரே உணவளித்து வருகின்றனர். 'எனவே, மூதாட்டியின் உணவு, உடை, பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, ஊரடங்கால் வாட்டும் வறுமை தவிக்கும் 105 வயது மூதாட்டி என்று தலைப்பிட்டு கடந்த 29ம் தேதி நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இச்செய்தி எதிரொலியாக, மூதாட்டி காசியம்மாளுக்கு, சமூக ஆர்வலர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள் என பல்வேறு தரப்பினரும் பணம் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, அரியலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஸ்ரீனிவாசன் நேற்று முன்தினம் மாலை மூதாட்டி காசியம்மாளை நேரில் சந்தித்து, தேவையான உதவிகளை செய்து தருவதாக அவரிடம் தெரிவித்தார். பின்னர், ரொக்கப்பணம் மற்றும் அரிசி மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.