வால்பாறை:வால்பாறையில், விடிய விடிய பெய்த கனமழையால், மேல்நீராறு அணையில், 82 மி.மீ., மழையளவு பதிவானது.வால்பாறையில், தென்மேற்கு பருவமழை, பெய்யும் நிலையில், முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக்டேம் சில தினங்களுக்கு முன் நிரம்பியது.இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, விடிய விடிய கனமழை பெய்ததால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் கடுங்குளிர் நிலவுகிறது.மேல்நீராறு அணையில் இருந்து வினாடிக்கு, 416 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையில் இருந்து, 52 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 96.10 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 910 கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 415 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 நாட்களில், சோலையாறில், 28 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 34, வால்பாறை - 44, மேல்நீராறு - 82, கீழ்நீராறு - 80, காடம்பாறை - 2, பரம்பிக்குளம் - 47, துணக்கடவு - 4, பெருவாரிப்பள்ளம் - 17, மணக்கடவு - 19, சர்க்கார்பதி - 10, வேட்டைக்காரன்புதுார் - 11, பொள்ளாச்சி - 15, நவமலை - 4, என்ற அளவில் மழை பெய்தது.