சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுடன் பேசுமா தமிழகம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சிறுவாணி அணை விவகாரம்: கேரளாவுடன் பேசுமா தமிழகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2020
02:24

கோவை:கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான, சிறுவாணி அணையின் முழு கொள்ளளவான, 50 அடிக்கு தண்ணீர் தேக்க, கேரள அரசுடன், தமிழக அரசு பேச்சு நடத்த வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள, சிறுவாணி அணை உயரம், 50 அடி. கடந்தாண்டு பருவ மழை பெய்தபோது, கேரளாவில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், அணைகளில், அதன் மொத்த கொள்ளளவில், 5 அடி குறைவாக நீர் தேக்க, அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, சிறுவாணியில், 45 அடிக்கு தேக்கப்பட்டது.கோவை மக்களின் நீராதார பிரச்னை என்பதால், முழு கொள்ளளவு நீர் தேக்க, தமிழக அரசு சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும், அம்மாநில அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், பருவ மழை பெய்யத் துவங்கியிருப்பதால், சிறுவாணிக்கு நீர் வரத்து காணப்படுகிறது. கடந்தாண்டு, 5 அடி குறைவாக இருப்பு வைத்ததால், கோவை நகர் பகுதியில், ஏப்., மே, ஜூன் மாதங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. சில பகுதிகளில், 10 நாட்கள், சில பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறையே மாநகராட்சியால் சப்ளை செய்ய முடிந்தது.


அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கியிருந்தால், தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. அதனால், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன், இப்போதே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சு துவக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இரு மாநில அரசு உயரதிகாரிகள் மட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினர் பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும்.


அணை பாதுகாப்பாக இருப்பதால், முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கலாம்; கோடையில், கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏழாது. சிறுவாணி விவகாரம் தொடர்பாக, கேரளாவுடன் பேச, தமிழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X