நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் காலனி சுடுகாட்டிற்கு செல்ல சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சி.என்.பாளையம் காலனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுடுகாடு கெடிலம் நதிக்கரையில் உள்ளது. சுடுகாட்டிற்கு செல்லும் வழி சரியில்லாததால் அவதியடைந்து வந்தனர்.இதையடுத்து குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், தொகுதி நிதியில், கடந்த 3 ஆண்டிற்கு முன் சுடுகாடு செல்ல தார் சாலை அமைத்து கொடுத்தார்.இந்த வழியில் கோட்டக்கரை என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் மழைகாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால், சாலை போட்டாலும் அடித்து சென்று விடும். எனவே, அப்பகுதியில் 500 மீட்டர் துாரத்தை விட்டு விட்டு சாலை போட்டனர்.சாலை போடாத 500 மீட்டர் துாரம் பள்ளமாக உள்ளதுடன், அப்பகுதியில் புதர் மண்டியுள்ளதால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சி.என்.பாளையம் பஸ் நிலையம், காமாட்சிப்பேட்டை வழியாக சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு கோட்டக்கரை பகுதியில் தடுப்பு அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், பணி துவங்கவில்லை. எனவே, கோட்டக்கரை பகுதியில் தண்ணீர் கீழ் பகுதியில் ஓடுமாறு சிறிய பாலம் அமைத்து, மீதி உள்ள இடத்தில் சுடுகாடு செல்ல சாலை போட்டால், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.எனவே, அதிகாரிகள் இப்பபகுதியை ஆய்வு செய்து, சுடுகாடு செல்ல சாலை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.