சிதம்பரம்; சிதம்பரத்தில் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கூடியவர்களை போலீசார் வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருமணம் மற்றும் இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த மாதத்தில் உள்ள 4 ஞாயிற்றுகிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று இரண்டாம் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.இதற்கிடையே நேற்று முகூர்த்த நாள் என்பதால், திருமணம்நடத்த முடிவு செய்திருந்த பலர் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக பல இடங்களில் மண்டபங்களில் வைக்கப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு, வீட்டிலேயே நடத்தப்பட்டது.சில இடங்களில் வேறு வழியின்றி மண்டபத்தில் திருமணங்கள் நடந்தது. இதுபோல் சிதம்பரம் வண்டிகேட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில், 300 க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார் அங்கு விரைந்து, சமூக இடைவெளியின்றியும், முக கவசமின்றியும் மண்டபத்தில் கூடியிருந்த பொதுமக்களை எச்சரித்து வெளியேற்றினர். திருமண வீட்டாரையும் வெளியேற உத்தரவிட்டனர்.மண்டப மேலாளரிடம் மண்டபத்திற்கு சீல் வைத்து விடுவதாக எச்சரித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.