முழு ஊரடங்கு:ஊரகப்பகுதிகளில் தேவை விழிப்புணர்வு! | திருப்பூர் செய்திகள் | Dinamalar
முழு ஊரடங்கு:ஊரகப்பகுதிகளில் தேவை விழிப்புணர்வு!
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

13 ஜூலை
2020
02:05
பதிவு செய்த நாள்
ஜூலை 12,2020 23:45

திருப்பூர்:அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, நேற்றும், முழு ஊரடங்கை, பொதுமக்கள் கடைபிடித்தனர்; இருப்பினும், ஊரகப்பகுதி களில், விழிப்புணர்வு போதியளவு இல்லை.அரசின் அறிவிப்புக்கு ஏற்ப, கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில், இம்மாதத்தின், ஞாயிறு முழு ஊரடங்கு, நேற்று, 2வது வாரமாக கடைபிடிக்கப்பட்டது.


நகரின் பிரதான ரோட்டில் இருந்த கடைகள், முற்றிலும் அடைக்கப்பட்டு, வெறிச்சோடி இருந்தது. அதே நேரம், சந்து, வீதிகளில் இருந்த மளிகை, கறிக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன.ஒதுக்குப்புற பகுதிகளில், மக்கள் வழக்கம் போல் நடமாடினர்; டூவீலர்களில் இளைஞர்கள் வலம் வந்தனர். பொழுதுபோக்கும் நோக்கில், நகர சாலைகளுக்கு வந்த அவர்களை போலீசார் மடக்கி, அறிவுரை வழங்கினர்; வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.திருப்பூர் மண்ணரை சத்தியா காலனி முதல் வீதியில் காலை, 5:45 மணிக்கே மட்டன் கடை திறக்கப்பட்டு, விற்பனை துவங்கியது.


வெங்கடாசலபதி நகர் மூன்றாவது வீதியில், முழுஷட்டர் திறந்து மளிகை கடையில் விற்பனை ஜோராக நடந்தது. பாரப்பாளையம் - குளத்துப்பாளையம் சாலையில் கடைகள் திறக்கப்பட்டிருந்தது.காசிபாளையம் சிட்கோ ரோட்டில் போலீசார், காலை, 6:15 மணிக்கே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


செவந்தம்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் அருகே உள்ள காலியிடத்தில் பலர் 'வாக்கிங்' சென்றனர்.போலீசார் ரோந்து வருவதை அறிந்ததும், பி.ஏ.பி., நகர், எம்.ஜி.பி., தியேட்டர் பின்புற சாலையில், திறந்திருந்த மளிகை கடைகள் அவசர கதியில் மூடப்பட்டன. காங்கயம் ரோடு வழியாக, சில சரக்கு வாகனங்கள் பயணித்தன.ஊரகப்பகுதிகளான, அவிநாசி, பல்லடம், வெள்ளகோவில் உள்ளிட்ட இடங்களில், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.


அசைவ ஆசையால் இம்சைஞாயிறு விடுமுறையன்று, அசைவ உணவு உண்டு பழகிய மக்கள், நேற்று முன்தினம் இரவே, கோழி, ஆடு, மீன் இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். முக கவசம் அணியாமலும், இடைவெளி இல்லாமலும், பலர் இறைச்சி வாங்கி சென்றனர்.நேற்று, ஊரகப்பகுதிகளில் காலை நேரங்களில் இறைச்சி விற்பனை நடந்தது.


குறிப்பாக, அவிநாசி அருகே, சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இறைச்சி வியாபாரிகள் பலர், தங்கள் வீடுகளிலேயே, இறைச்சி வியாபாரம் செய்தனர்; மக்கள், கூட்டமாக சென்று, அவர்களது வீடுகளில் இருந்து இறைச்சி வாங்கி சென்றனர்.கடந்த வார முழு ஊரடங்களை ஒப்பிடுகையில், ஊரகப்பகுதிகளில், விழிப்புணர்வு போதியளவில் இல்லை. எனவே, போதிய விழிப்புணர்வை வழங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X