கடலுார்; திருமணம் செய்த பிறகு வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் கொலை மிரட்டல் விடுப்பதாக, எஸ்.பி.,யிடம் பெண் புகார் அளித்துள்ளார்.கடலுார் முதுநகர் சுத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா, 20; இவரும் புதுப்பாளையத்தை சேர்ந்த மோகன் மகன் விஜய் என்பவரும் காதலித்து, திருவந்திபுரம் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்தனர். ஏற்கனவே, பவித்ராவை திருமணம் செய்ய விஜய் மறுத்த நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, திருமணம் நடந்துள்ளது.இந்நிலையில், திருமணம் செய்த நாள் முதல் கணவர் விஜய், தன்னுடன் குடும்பம் நடத்தவில்லை. பெற்றோர் பேச்சை கேட்டு வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக, கடலுார் எஸ்.பி., ஸ்ரீஅபிநவை சந்தித்து, பவித்ரா நேற்று மனு அளித்தார்.அந்த மனுவில், என்னிடம் வரதட்சணையாக நகை, பணம், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை வாங்கி வரவேண்டும் என, எனது கணவர் விஜய், அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் என்னை திட்டி, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார்.