பெரம்பலுார் : அரசு கொள்முதல் நிலையத்தில், சாக்கு பற்றாக்குறையால், சாலையில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள், மழையில் நனைந்து முளைத்ததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அரியலுார் அருகே, பல்வேறு கிராமங்களில், தற்போது நெல் அறுவடை நடக்கிறது. நெல்லை, கோடாலிக்கருப்பூர் கிராமத்தில் உள்ள, அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.கொள்முதல் நிலையத்தில், போதிய இடவசதி மற்றும் சாக்கு பற்றாக்குறையால், முழுமையாக அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை. இதனால், கொள்முதல் நிலையம் அருகே, சாலையோரங்களில், திறந்த வெளியில், நெல்லை கொட்டி, தார்ப்பாய் போட்டு மூடி, 15 நாட்களுக்கும் மேலாக, இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர். கடந்த, நான்கு நாட்களாக, தினமும் மாலை நேரங்களில், இப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதில், நெல் மணிகள் நனைந்து, முளைக்க துவங்கி விட்டன.
இதனால், விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.மேலும், கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும், மழையில் நனைந்து முளைக்கும் நிலையில் உள்ளன. 'உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.