| வீழ்ச்சி! வாழைத்தார் வாங்க ஆளில்லாமல் விலை...வயலிலேயே பழுத்து வீணாகும் அவலம் Dinamalar
வீழ்ச்சி! வாழைத்தார் வாங்க ஆளில்லாமல் விலை...வயலிலேயே பழுத்து வீணாகும் அவலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
23:29

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், வாழைத்தார்களை வாங்க ஆளில்லாததால், வயலில் பழுத்து அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில், அதிகளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு காய்க்கும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், திருச்சி, சென்னை கோயம்பேடு பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர். இதனால் வியாபாரிகள் வயலுக்கே நேரடியாக சென்று வாழைத்தார்களை, நல்ல விலை கொடுத்து வாங்கி, வாகனங்களில் பல பகுதிகளுக்கு அனுப்பினர். கடலுார் மாவட்டத்தில், நடப்பாண்டு 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.கடலுார் அடுத்த ராமாபுரம், வழிசோதனைப்பாளையம், வெள்ளக்கரை, எஸ்.புதுார், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூவன், ஏலக்கி, செவ்வாழை உள்ளிட்ட பல ரகங்கள் சாகுபடி செய்து, அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஏற்றுமதி சிக்கல்கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விளைந்துள்ள வாழைத்தார்களை அறுவடை செய்து, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவல் காரணமாக முற்றிலும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால் வாங்குவதற்கு ஆள் இல்லாததால், வாழைத்தார்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. கடந்த மூன்று மாதங்களாக ஒரு தார் ரூ.100 வரையே விலை போனது. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் கூட, ஒரு தார் ரூ. 50க்கு கொள்முதல் செய்யப்பட்டது.வாழை தார்களை வாங்க ஆளில்லாததால், வயல்களிலேயே மரத்தில் பழுக்கின்றன. ஓரிரு பழங்கள் பழுத்த தார்களை கூட, வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதற்குள் வீணாகி விடும் என்பதால், வியாபாரிகள் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.இதனால், மரத்திலேயே வாழை பழுத்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல், கடந்தாண்டு ரூ.60 வரை விற்ற ஒரு கிலோ ஏலக்கி ரூ.45 வரையும், ரூ. 50க்கு விற்ற செவ்வாழை ரூ. 35 வரையும் கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.இது குறித்து கடலுார் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த வாழை விவசாயி கற்பகச்செல்வன் கூறுகையில், 'ஊரடங்கால், கோவில் திருவிழாக்கள், திருமணம், மஞ்சள் நீர், காது குத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறைந்து, வாழைத்தார்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது.கடந்த ஆண்டு ஆடி மாதத்தில் வாழைத் தார்கள் ரூ.450 வரை விலை போயின.கொரோனா காரணமாக கோவில்களில் திருவிழா நடக்காததால், தற்போது விலை போகவில்லை. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய ஆட்கூலி, உரம் என ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. ஒரு வாழை மரத்திற்கு முட்டு கொடுக்க சவுக்கு கம்பு ஒன்று ரூ. 50க்கு வாங்கி, அதனை ரூ.10 கூலி கொடுத்து நட வேண்டியுள்ளது. அந்த செலவிற்கு கூட வாழைத்தார்கள் விற்கவில்லை. வாங்க ஆளில்லாததால், வயலில் 40க்கும் மேற்பட்ட தார்கள் பழுத்து வீணாகியுள்ளன' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X