| செம்பேரி தடுப்பணையில் மழைநீர் தேக்கம் Dinamalar
செம்பேரி தடுப்பணையில் மழைநீர் தேக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2020
23:30

பெண்ணாடம் : செம்பேரியில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் மழைநீர் தேக்கமடைந்து, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் இரு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



கடலுார் - அரியலுார் மாவட்டங்கள் இடையே வெள்ளாற்றின் கரையோரம் பெண்ணாடம், பெ.பொன்னேரி, செம்பேரி, சவுந்திரசோழபுரம், பெரியகொசப்பள்ளம், சின்னகொசப்பள்ளம், துறையூர், முருகன்குடி மற்றும் அரியலுார் மாவட்டம், ஆலத்தியூர், முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, கோட்டைக்காடு, தெத்தேரி உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம விவசாயிகள் ஆற்றங்கரையோரங்களில் போர்வெல் அமைத்து கரும்பு, நெல் மற்றும் தோட்ட பயிர்களான வாழை, கத்தரி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாததால் ஆற்றில் நீர்வரத்தும் குறைந்தது.



அவ்வப்போது அரியலுார் மாவட்ட கிராமங்களில் பெய்யும் கனமழை காரணமாக ஆணைவாரி, உப்பு ஓடைகளின் வழியாக வரும் மழைநீர் வெள்ளாற்றில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள போர்வெல்லின் நீர்மட்டம் கணிசமாக உயரும். இதனை பயன்படுத்தி இரு மாவட்ட விவசாயிகள் கரும்பு, நெல் மற்றும் தோட்ட பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.போதிய மழை இல்லாததால் நீர்மட்டம் முற்றிலும் சரிந்து போர்வெல்லும் பழுதாகி, விவசாய பணிகளில் தடை ஏற்பட்டது.



அதைத்தொடர்ந்து, செம்பேரி - ஆலத்தியூர் இடையே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி, அந்தந்த மாவட்ட நிர்வாகம், முதல்வருக்கு கோரிக்கை மனு அளித்ததின்பேரில், கடந்த 2018ல் அரியலுார் மாவட்டம், மருதையாறு வடிநில கோட்டம் சார்பில், சுரங்கம் மற்றும் கனிமம் அறக்கட்டளை வைப்பு நிதியில் 30 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த இரண்டு வாரமாக அரியலுார் மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் ஆணைவாரி, உப்பு ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளாற்றில் கலந்தது.



இதனால் தடுப்பணையில் 5 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் ஆற்றங்கரையோர விளைநிலங்களில் உள்ள போர்வெல்லில் நீர்மட்டம் உயரும் என்பதால் இருமாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, செம்பேரி விவசாயி ஒருவர் கூறுகையில், 'இப்பகுதியில் பல ஆண்டுகளாக போர்வெல் நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது வெள்ளாற்றில் தடுப்பணை கட்டியதால் சமீபத்தில் பெய்த மழைக்கு தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் போர்வெல் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புள்ளது' என்றார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X