| மாடம்பாக்கம் ஏரியில் அரைகுறை பணி: கூடுதல் நீரை சேமிக்க முடியாத அவலம் Dinamalar
மாடம்பாக்கம் ஏரியில் அரைகுறை பணி: கூடுதல் நீரை சேமிக்க முடியாத அவலம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

04 ஆக
2020
17:07
பதிவு செய்த நாள்
ஆக 04,2020 00:25



சென்னை புறநகரில் உள்ள, மாடம்பாக்கம் ஏரி, நிரம்பியும், அதிக தண்ணீரை சேமித்து வைக்க முடியாததால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு, பொதுப்பணித் துறையின் அரைகுறை பணியே காரணம் என, புகார் எழுந்துள்ளது.




சென்னை, புறநகரில் உள்ள, மாடம்பாக்கம் பேரூராட்சியில், 250 ஏக்கர் பரப்பில், பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரி, மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, நுாத்தன்சேரி ஆகிய பகுதிகளின், நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது.இதை நம்பி, 650 ஏக்கர் விவசாய நிலங்கள், பாசன வசதி பெற்றன. தற்போது, 400 ஏக்கருக்கும் குறைவாக, இவை சுருங்கிவிட்டன.கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேல், ஏரி துார் வாரப்படாத நிலையில், 2018 ஜூன், 3ம் தேதி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை குழுவினர், சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.அவர்களை, 'மாடம்பாக்கம் - சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான பணி துவங்க உள்ளது' எனக்கூறி, பொதுப்பணித் துறை அதிகாரிகள், பணி செய்ய விடாமல், தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.




தொடர்ந்து, 2019 ஏப்ரலில், அரசு உத்தரவின் படி, இந்த ஏரிக்குள் மண் எடுக்கும் பணிகள் நடந்தன. அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட, மண் எடுக்கப்பட்டதுடன், ஏரியின் ஒருபுறம் மட்டுமே கரைகள் சீரமைக்கப்பட்டன.மறுபுறம் சேதமடைந்திருந்த கரைகள், மதகுகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், |ஏரி நிரம்பியும் வீணாக நீர் வெளியேறி வருகிறது.




அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:ஏரியின் வடக்கு திசையில், ராஜம்மாள் நகர் பூங்கா பின்புறம் உட்பட, நான்கு இடங்களில் உள்ள மதகுகள் சேதமடைந்துள்ளன; அங்குள்ள, கலங்கல் பகுதியும், உயர்த்தி அமைக்கப்படவில்லை.பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஏரிக்குள் மண் எடுக்கும் பணிகளை செய்தபோது, ஒரே சீராக மண் எடுக்காமல், கொத்தி குதறி ஏரியை சேதப்படுத்தினர்.



அப்போதே, சேதமடைந்திருந்த கரைகளை சீரமைக்க கோரினோம்; அவர்கள், எந்த பணிகளையும் உருப்படியாக செய்யாமல், மண்ணை அள்ளி விற்று, லாபம் பார்ப்பதிலேயே குறியாக செயல்பட்டனர்.இதனால், பருவமழையின் போது ஏரி நிரம்பியும், விவசாயத்திற்கான தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல், சேதமடைந்துள்ள மதகுகள் வழியாக, நீர் வீணாக வெளியேறி வருகிறது.இன்று வரை, மதகுகள் மற்றும் கலங்கலை சீரமைக்க, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு தலையிட்டு, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X