சென்னை: ஊரடங்கால், வேலை இழந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் தலைவர் அசோக், நிவாரண பொருள் உதவி வழங்கினார்.வேளச்சேரி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அசோக், தற்போது, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் தலைவராக உள்ளார்.இவர், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவ முன்வந்தார். நேற்று முன்தினம், வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, அரிசி, காய்கறி பொருட்கள் வழங்கினார்.இது குறித்து, அசோக் கூறியதாவது:ஏப்ரல் முதல், ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வருகிறேன். வேளச்சேரி பகுதியில், 5,000 பேருக்கு, நிவாரணம் வழங்க முடிவு செய்து, தொடர்ந்து வழங்கி வருகிறேன்.பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால், ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவும் வகையில், வேளச்சேரி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 500 ஓட்டுனர்களுக்கு, பொருள் உதவி செய்து வருகிறேன்.அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, கொரோனாவை தடுக்க, பொதுமக்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.