ஊட்டி:நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், 581 மி.மீ., மழை பதிவாகி உள்ளது; எமரால்டு சத்தியா நகரில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மக்கள் வெளியேற, உத்தரவிடப்பட்டுள்ளது.மூன்றாம் நாளாக தொடரும் கனமழையால், பல இடங்களில் மரம் விழுந்து, மாவட்டம் முழுவதும் மின்தடை தொடர்கிறது.
அவலாஞ்சியில் அதிகபட்சமாக, 581 மி.மீ., பதிவாகி உள்ளது. அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, ஊட்டி, பைக்காரா, கூடலுார், பந்தலுார் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும், மரங்கள், மின் கம்பங்கள் மீது விழுந்தன.கூடலுார்- சிங்காரா உயர் மின் அழுத்த பாதையில் உள்ள 'டவர்' விழுந்து பாதிப்பு ஏற்பட்டதால், கூடலுார், பந்தலுார் பகுதி மின்வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள் மூன்றாவது நாளாக இருளில் மூழ்கியுள்ளன.தீயணைப்பு துறை நீலகிரி மாவட்ட அலுவலர் இமானுவேல் கூறுகையில்,'' மாவட்டத்தில் இதுவரை, காற்றில், விழுந்த, 200 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. 300 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.
எமரால்டு சத்தியா நகரில், நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர். அவர்களை உடனடியாக வெளியேற வருவாய் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.ஊட்டியில் ஏற்பட்ட மின் தடையால் நகராட்சி பகுதி, வெலிங்டன் ராணுவ மையத்திற்கு குடிநீர் வினியோகிப்பதில் மூன்றாம் நாளாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் மழைநீரை குடிநீராக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.முகாம்களில் 1000 பேர்கூடலுார் பகுதியில் வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், இரண்டாவது மைல், புளியம்பாறை பகுதிகளில் பாதிக்கப்பட்ட, 10 குடும்பங்களை சேர்ந்த, 26 பேரை வருவாய் துறையினர் மீட்டு, அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைத்தனர்.
காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, புறமனவயல் பழங்குடியினர் கிராமத்தை தண்ணீர் சூழந்தது.வெளியே வர முடியாமல் தவித்த பழங்குடி மக்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பொன்னானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால், மக்கள் ஆற்றின் கரைக்கு செல்ல கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில், கூடலுார், பந்தலுார், எமரால்டு, குந்தாபாலம் பகுதிகளில் உள்ள, 13 நிவாரண முகாம்களில், 1000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அணை நீர் வெளியேற்றம்குந்தா மின் வட்ட மேற்பார்வை பொறியாளர் ரவி கூறுகையில்,'' அவலாஞ்சியில் கடந்த மூன்று நாட்களில், அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. இதனால், அவலாஞ்சி மின் நிலையத்தின் மேல்புறம், 2018ம் ஆண்டு போல மண் சரிவு ஏற்படாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக, குந்தா்அணையில் இருந்து, விநாடிக்கு, இன்று (நேற்று) காலை நிலவரப்படி, 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுருகிறது,'' என்றார்.
முன்னெச்சரிக்கை அவசியம்
கலெக்டர் இன்சென்ட் திவ்யா கூறுகையில், ''வரும், 9ம் தேதி வரை மழை தொடரும் என்பதால், மக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம். கூடலுார், ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி, குந்தா பகுதிகளில், பேரிடர் சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ''மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் இரவில் தங்க வேண்டாம். முகாம்களுக்கு வர வேண்டும்,'' என்றார்.