பல்லடம்:பல்லடம் அருகே குட்டை ஒன்றில், கால்நடை மருந்து கழிவுகள், குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.மருந்து, மற்றும் மருத்துவ கழிவுகள், பி.ஏ.பி., வாய்க்கால், குளம் குட்டைகள், மற்றும் பொது இடங்களில் கொட்டுவது, பல்லடத்தில் அதிகரித்து வருகிறது.இவற்றால், மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள், மருத்துவ கழிவுகளை சாப்பிட்டு பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. பல்லடத்தை அடுத்த வெட்டுப்பட்டான்குட்டை -- சேடபாளையம் செல்லும் ரோட்டில் குட்டை உள்ளது.அதில், மாத்திரைகள், தடுப்பூசி மருந்துகள் என, கால்நடை மருந்துகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன. அவை காலாவதியானவையா அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக கொட்டப்பட்டதா என்று தெரியவில்லை.மருத்துவ கழிவுகள், மற்றும் காலாவதியான மருந்துகளை, முறையாக அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். ஆனால், ஒரு சிலர் இதை பின்பற்றாமல், பொது இடங்களில் வீசி செல்கின்றனர். இவற்றால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, இதுபோன்ற விதி மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குட்டையில் மருந்து கழிவுகளை கொட்டியவர்கள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.